பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

112


மாகவும் தமது கொள்கைகளை விரிவுபடுத்திய, பெரியார், அப்போது சமதர்மத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திக் காட்டிய சோஷலிச சோவியத் ரஷ்ய நாட்டை நேரில் கண்டுவர விரும்பினார். இச்சமயத்தில் 1931- நவம்பரில், அவருக்கு உடல் நலிவுற்றது; நாகம்மையார் ஓர் அறிக்கை வாயிலாகவும் இதனை வெளிப்படுத்தி, அவருக்கு ஓய்வு தேவையென வேண்டியிருந்தார். எனினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எஸ். இராமநாதன், ஈரோடு இராமு ஆகியோருடன் மேல்நாட்டுச் சுற்றுப் பயணத்துக்காகக் கப்பலில் 4-ஆம் வகுப்பில் வசதிக் குறைவென்றாலும் சிக்கனம் கருதி அதிலேயே புறப்பட்டுவிட்டார் பெரியார்! ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த வரையில் வேட்டி சட்டையுடன் இருந்தார்; பின்னர் கம்பளி யாலான முழுக்கால் சட்டை, முழுநீள ஓவர்கோட், பெரிய தலைப்பாகை இவற்றுடன், காண்பவர் கண்களைக் கவரும் கம்பீரமான தோற்றத்துடன், பெரியார் மேலைநாடுகளில் வலம் வந்தார்.

1931-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 13-ஆம் நாள் சென்னையிலிருந்து கிளம்பிப் பாண்டிச்சேரியில் ஒரு நாள் கப்பலில் தங்கியபோது, பாரதிதாசன் வந்து பார்த்து, அன்னியச் செலாவணி நாணயங்களை மாற்றித்தந்தாராம். டிசம்பர் 24-ஆம் நாள் தென்னாப்பிரிக்காவில் இறங்கி, அங்கே அய்ந்தாறு நாள் சுற்றிப் பார்த்துச் சூயஸ் கால்வாய் வழியே பிறகு எகிப்து சென்று, அங்கு 10 நாட்கள்; அதன் பின்னர் கிரீஸ், துருக்கி நாடுகளில் சில வாரங்கள்; அதற்குப் பிறகு சோவியத் ரஷ்யாவில் 1932-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் முதல் மே 19-ஆம் நாள்வரை தங்கியிருந்தனர். சோவியத்நாட்டில் பெரியார் குழுவினர்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இளைஞர் சங்கங்கள், நாத்திகச் சங்கங்கள், தொழிற்சாலை நிர்வாகம் ஆகியவை பெரியாரை வரவேற்றன. சுமார் மூன்று மாத காலம், அரசு விருந்தினராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, மொழி பெயர்ப்பாளர்களின் துணை கொண்டு, பல்வேறு நகரங்களிலுள்ள இடங்களையும் விரிவாகச் சுற்றிப் பார்த்து விளக்கம் பெற்றார் பெரியார். மிகப்பெரிய தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், நூலகங்கள், நாடக அரங்குகள், வேளாண்மைப் பண்ணைகள், பொது உணவு விடுதிகள், லெனின் மியூசியம், லெனின் உடல் பாதுகாக்கப்படும் இடம் ஆகிய எல்லா இடங்களையும் நல்ல முறையில் கண்டார். ஆங்காங்கு சிறிய பொதுக் கூட்டங்களில் பேசினார். தொழிற்சங்கங்களில் உரையாற்றி, வரவேற்பும் பெற்றார். அப்போது நடைபெற்ற மாபெரும் மேதின விழா அணிவகுப்பினையும் பார்வையிட்டார். அங்கு அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ள வந்த ரஷ்யத் தலைவர் ஸ்டாலினுக்கு, இந்தியாவிலிருந்து வந்துள்ள நாத்திகத் தலைவர் என அறிமுகம் செய்யப்பட்டார். எட்ட நின்றே இருவரும் வணக்கம் பரிமாறிக்கொள்ள முடிந்தது. ஸ்டாலினுடன் பேட்டி ஒன்று, 1932-மே 29-ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.