பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ரஷ்யா போய்ச் சேர்ந்ததுமே பெரியார் தன்னையும் ராமநாதனையும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பம் செய்து, உறுப்பினர் கட்டணமும் செலுத்தி, அவ்வாறே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் பெரியாருடன் சென்றிருந்த எஸ். இராமநாதனுடைய நடவடிக்கைகளில் ஏதோ சந்தேகம் கொண்ட சோவியத் அரசு, 19-ஆம் நாளே இவர்கள் ரஷ்யாவிலிருந்து புறப்பட வேண்டுமென்று தெரிவித்துவிட்டது! கைக்கெட்டிய வாய்ப்பு கை நழுவிப் போன வருத்தம் பெரியாருக்கு!

அதற்கு அப்பால், ஜூன் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். இங்கிலாந்தை நன்கு சுற்றிப் பார்த்துப் பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். பிரபல இந்தியத் தொழிற்சங்க வாதியான சக்லத்வாலாவையும் கண்டு பேசினார். 1932-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் இங்கிலாந்தில் யார்க்‌ஷயரிலுள்ள மேக்ஸ்பரோ லேக்பார்க்கில் சுமார் அய்ம்பதாயிரம் தொழிலாளர் நிரம்பிய கூட்டத்தில் பெரியார் உரையாற்றினார். அப்போது இங்கிலாந்தில் தொழிற்கட்சி ஆட்சி நடத்தி வந்தது. இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேரம் வேலை செய்யும் ஆண் தொழிலாளர் நாள் ஒன்றுக்கு எட்டணாவும், பெண் தொழிலாளர் அய்ந்தணாவும் கூலி பெற்று, வறுமையில் நெளிகின்றனர். இந்தியாவில் மன்னர்களும், ஜமீன்தார்களும், மிட்டா மிராசுகளும், முதலாளிகளும், வெள்ளைக்கார வியாபாரிகளும், சாமான்யக் குடிமக்களாகிய பெரும்பான்மையினரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைக்க உதவிடும் ஓர் ஆட்சி அங்கு நடைபெற, இங்குள்ள தொழிற்கட்சி எப்படி அனுமதிக்கிறது? ஆகவே, போலித்தனமான இந்தத் தொழிலாளர் நலக் கொள்கைகளை நம்பாமல், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாய்ப் போராட வேண்டும் என்று பெரியார் முழங்கினார். சிங்கத்தின் குகையிலே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்து உலுக்குவது போல, இங்கிலாந்து சென்று, அந்த அரசைக் கண்டித்தது கண்டு, தொழிளாலர்களும், அவர்களின் தலைவர் லான்ஸ்பரியும் பெரிதும் பாராட்டினர். திரும்பும்போது, மார்ஸேல்ஸிலிருந்து பெரியாரை இந்தியாவுக்குக் கப்பலேற்றிவிட்டு, எஸ். இராமநாதன், சில திங்கள் கழித்து வருவதாகக் கூறி, ஜெனிவா சென்றுவிட்டார்.

அய்ரோப்பாவை விட்டுப் புறப்பட்டுப் பெரியார் அப்படியே இலங்கை வந்தடைந்தார். 1932 அக்டோபர் 17 முதல் நவம்பர் 6 வரையில் இலங்கையில் சுற்றுப் பயணம் நடத்தினார். கொழும்பு, கண்டி, நாவலம்பிட்டியா, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை ஆகிய சுமார் 18 இடங்களில் நடந்த வரவேற்பு விழாக்களிலும் பொதுக்-