பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

114


கூட்டங்களிலும் விளக்கவுரையாற்றினார் பெரியார். "இலங்கை உபந்நியாசம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தச் சொற் பொழிவுகளின் தொகுப்பு மிகுந்த புரட்சிகரமானதாகும். இலங்கைக்கு எதிர் கொண்டு சென்று அவருடன் அன்னை நாகம்மையாரும், மாயவரம் நடராசனும் கலந்து கொண்டனர். தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சமத்துவம் ஆகியவை பற்றித் தாம் மேல் நாடுகளில் கண்டவற்றையும் இணைத்துத் தமது கோட்பாடுகளை இலங்கைத் தொழிலாளரிடையே பல கூட்டங்களில் விவரித்தார். இலங்கைத் தமிழரிடையே நல்ல முறையில் சுயமரியாதை இயக்கம் தழைத்துப் பரவிற்று. பின்னர் 1932 நவம்பர் 11-ஆம் நாள் ஈரோடு வந்து சேர்ந்தார், தூத்துக்குடி வழியே!

அதற்குப் பிறகு நிறைய நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டார். கருத்தாழமிக்க “இலங்கைச் சொற்பொழிவுகள்” குறிப்பிடத்தக்க விளக்க நூலாகும். கீழ் நாடு மேல் நாடு பயணக் கட்டுரைகளும் பெரிதும் அறிவு புகட்டத் தக்கவைகளாகும். அவரது எல்லாச் செயல்களிலும் பொதுவுடைமை மணம் கமழத் தொடங்கிற்று. ஆண்களைத் தோழர் என்றும், பெண்களைத் தோழியர் என்றும் விளிக்குமாறு பணித்தார். சோவியத் நாட்டின் அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். தாம் பயணம் சென்றிருந்த காலத்தில், இயக்கம் சோர்வடையாதவாறு, தம் தமையனாரும், தம் துணைவியாரும் பாதுகாத்து, இயக்க நண்பர்களின் பெருந் துணையோடு தளர்வுறாமல் வைத்தது கண்டு, பெருமிதங் கொண்டார்.

சமதர்மக் கருத்துக்களை மேலும் தோழர்களிடையே விளக்க மளித்திடப் பெரியார் விரும்பினார். சிந்தனைச் சிற்பி மா. சிங்காரவேலர் பேருதவி புரிந்தார். இயக்கத்தின் புதிய வரவுகளாக ப. ஜீவானந்தம், கே.எம். பாலசுப்ரமணியம், கே. முத்துசாமி வல்லத்தரசு, பண்டித திருஞான சம்பந்தம், டி.வி. சுப்பிரமணியம், பேராசிரியர் லட்சுமி நரசு, எஸ், லட்சுமி ரதன் பாரதி, டி.வி. சோமசுந்தரம், சேலம் ஏ. சித்தையன், சேலம் ஆர். நடேசன் மற்றும் ஏராளமானோர் மிக்க ஆர்வத்துடன் பேசவும் எழுதவும் முற்பட்டிருந்தனர். இவர்களை யெல்லாம் நன்முறையில் பயன்படுத்திட, ஈரோட்டில், பெரியார் 1932-டிசம்பர் 28, 29 நாட்களில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டம் ஒன்றினை மிகச் சிறப்புடன் நடத்தினார். புதிய பொருளாதாரப் புரட்சித்திட்டம், நாட்டில் பொதுவுடைமைக் காற்றினைத் தென்றலாய் வீசச் செய்தது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மா. சிங்காரவேலர் மீனவர் குடியிற் பிறந்த பேரறிவாளர், உண்மையான பொதுவுடைமை வாதி. தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டு, ஏராளக் கஷ்டநஷ்டங்கள் அனுபவித்து வந்தவர்.