பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பெரிய நூல்நிலையம் அமைத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் செய்து, சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு யாராலும் மறுக்கவொண்ணாத வாதங்களை நிறுவிக் காட்டியவர். “குடி அரசு” இதழில் அறிவு விளக்கத்துக்கான கேள்விகளுக்கு ஆதார பூர்வமாகப் பதில்கள் எழுதி வந்தார். பல விஞ்ஞான அடிப்படையிலான நாத்திக நூல்கள் இயற்றியுள்ளார்.

நாஞ்சில் தமிழராள ப. ஜீவானந்தம் திருப்பத்தூரில் பள்ளி ஆசிரியராக இருந்த போது பெரியாரால் அழைத்து வரப்பட்டார். பெரியவர்களுக்கே பாடம் புகட்டும் அறிவு அவருக்கு இருப்பதாகப் பெரியாரே புகழ்ந்துரைத்தார். பொதுவுடைமை அடிப்படையிலான சுயமரியாதைக் கருத்துகளை மேடைகளில் ஆவேசமாக, ஆத்திரமாக, ஆடிப்பாடி முழங்குவார். நல்ல தமிழ் அறிவு கொண்டவர். பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியில் தலைவராக விளங்கினார்.

திருச்சி கே. எம். பாலசுப்ரமணியம் ஆங்கிலத்திலும், அழகு தமிழிலும் எழுதவும், பேசவும் பேராற்றல் படைத்தவர். சில காலமே சுயமரியாதை இயக்கத்தில் இருந்தாலும் தனது முத்திரைகளை ஆழமாகப் பதித்தவர். பின்னாட்களில் சமயப் பிரச்சாரம் புரிந்தார். திருவாசகமணி என்னும் சிறப்புப் பெயரோடு, திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பெரியார் பற்றி ஆங்கில நூல் எழுதியுள்ளார்.

சோமசுந்தர பாரதியார் என்னும் நாவலரின் மகன் லட்சுமிரதன். ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும், லட்சுமிநரசு. மேடைகளில் வீர முழக்கமிடும் புதுக்கோட்டை வல்லத்தரசு சிறந்த செயல்வீரர்களான சேலம் ஏ. சித்தையன்; மற்றும் சேலம் ஆர். நடேசன். மற்ற யாவரும் படித்துப் பட்டம் பெற்று, அருமையான விரிவுரை ஆற்றும் வன்மை படைத்தவர்கள்.

இக்காலத்தில், ஓரிருவர் கொள்கை வேகம் தாங்க இயலாமல் ஒதுங்கிப் போனாலும், கொள்கை வேகத்தாலேயே வேறுபல்லோர் சேர்க்கப்பட்டுப், பெரியார் அணியில் வீரராக விரைந்தனர்.