பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

122


பேசியும் எழுதியும் வந்தார்; பல மாநாடுகளில் தீர்மானங்களும் இயற்றச் செய்தார். இதற்கு அவரே சோதனைக்கு ஆட்பட வேண்டிய சம்பவம் ஒன்று நடந்தது. “திராவிடன்” பத்திரிகை சம்பந்தமாக இவர்மீது ஒரு கடன் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. உண்மையில் அந்தக் கடன் இவருக்குரியதல்ல. எனினும் நியாயத்தைவிடச் சொல்லுக்கு மதிப்புத் தருபவராதலால், பெரியார் 1933 ஜூன் 2-ஆம் நாள் இதற்காகச் சிறைத்தண்டனை பெற்று, ஏற்றுக் கொண்டார். எனினும் சிறையிலிருந்து விடுதலை ஆன பின்னர் அந்தக் கடனைத் தாமே கொடுத்துத் தீர்த்துவிட்டார் பெரியார்.

1933 அக்டோபர் 29-ஆம் நாளில் வெளியான “குடி அரசு” இதழின் தலையங்கம் இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?' என்பது. இதில் தீவிர சமதர்ம வாடை வீசுவதாக அரசு கருதவே, இதனை எழுதிய தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரையும், “குடி அரசு” இதழின் வெளியீட்டாளரும், பெரியாரின் தங்கையுமான தோழியர் எஸ்.ஆர். கண்ணம்மாளையும் கைது செய்து, அவர்கள் மீது 1934 சனவரி 12-ல் ராஜத்துவேஷ வழக்குப் போடப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் வழக்கம்போல் பெரியார் எதிர்வழக்காடவில்லை; அன்றே வாக்குமூலம் ஒன்று வழங்கினார்:

“இ.பி.கோ. 124.A செஷன்படித் தொடரப்பட்டுள்ள பொதுவுடைமைப் பிரச்சாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காகவும் உள்ள வழக்கு கோவையில் 12-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டபோது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் கோவை ஜில்லாக் கலக்டர் ஜி. டபிள்யூ. வெல்ஸ் அய்.சி.எஸ். அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்.

என்பேரில் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது. வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-1933 “குடி அரசு" தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் எழுதப் பட்டிருக்கும் விஷயங்களுக்காவது, வாக்கியங்களுக்காவது இராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்கமுறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.

என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதர்மப் பிரச்சாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.