பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வெளியிட்ட இரங்கல் அறிக்கை; கையறு நிலைக் காவியமாய் இலக்கியத்தின் சிகரமாய் ஒளிரக் காணலாம்!

அன்று இரவே திருச்சிக்குச் சென்றார். மறுநாள் 1933 மே 12-ல் அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடையுத்தரவை மீறி, ஒரு கிறித்துவத் திருமணத்தை நடத்தி வைத்தார். கைதாகி, வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், வழக்கு திரும்பப் பெறப்பட்டது!

1932 டிசம்பர் இறுதியில் ஈரோட்டில் கூடிய சுயமரியாதைத் தொண்டர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்கால வேலை நடைமுறைகள் பல்விதமாய் அலசி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயக் கொள்கைகளுடன், சமதர்ம அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கையும், முற்போக்கான அரசியல் கொள்கையும் இணைக்கப்பட்டு, அதற்கு ஈரோடு வேலைத்திட்டம் எனப் பெயர் தரப்பட்டது. ஈ.வெ.ரா. பெரியார் தோழர் ராமசாமியாகிவிட்டார்; அதாவது பொதுவுடைமைக் கட்சியாகத் தமது இயக்கத்தை மாற்றி விட்டார்; அவர் ரஷ்யா சென்று வந்த விளைவு இது - எனப் பெரியார் மீது திரித்துக் குற்றம் சாட்டி, ஏராளமான தப்புப் பிரச்சாரம் நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. வஞ்சகர்களின் வாயை அடக்கவும், வகைபுரியாப் பாமரர்க்குத் தெளிவுறுத்திடவும் தமிழ்நாட்டில் பட்டி, தொட்டி, சிற்றூர் பேரூர், நகரம் மாநகரம் எங்கணும் கிளைகள் துவக்கப்பட்டும், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டும் பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் அருமையாக விளக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் அல்லாது கேரளத்திலும் இவர் கொள்கைகள் விரைந்து பரவின. ஈழவர் வகுப்புத் தாழ்த்தப்பட்ட மக்களின் மாபெரும் அமைப்பான எஸ்.என். டி.பி. யோகம், பெரியாரின் தலைமையைப் பெரிதும் போற்றியது; வைக்கம் போராட்டத்திலிருந்தே அங்கும் பெரியாரின் அன்பர்கள் பலர் இருந்து வந்தனர்.

1933-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற சுய மரியாதைச் சமதர்ம மாநாட்டுக்குக் கேரளத் தோழர் அய்யப்பன் தலைமை தாங்கினார். டாக்டர் வரதராஜலு நாயுடு தலைமையில் இம்மாநாட்டில் லெனின், நாகம்மையார் படங்களைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. திறந்து வைத்தார். 1926-ஆம் ஆண்டு கோவையில் சந்தித்ததற்குப் பின்பு. இப்போதுதான் இந்த முப்பெருந் தலைவர்களும் இணைந்து கூடினர். இந்தக் கூட்டினைக் கண்டு நாட்டினரில் பிற்போக்குவாதிகள் மனங்கலங்கினர்: அரசு அதிசயத்துடன் அகலத்திறந்த விழிகளும் செவிகளுமாய், என்ன நடக்குமோ என எதிர்பார்த்துக் கூர்ந்து கவனித்து வந்தது!

கடன்களைத் திருப்பித் தராததற்காகச் சிறை பிடிக்கக் கூடாது என்பது பெரியாரின் கொள்கையல்லவா? இதை வலியுறுத்தி நிறையப்