பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

120


பிரிந்து மேலை நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதால், பிரிவாற்றாமை காரணமாய்த்தான் அம்மையார் உடல் நலிவுற்றது. நினைவெல்லாம் தம் கணவர் மீதும் இயக்கத்தை வளர்க்கும் பிள்ளைகள் மீதும் நிலைத்திருக்க, எந்நேரமும் நாடு, மக்கள், இயக்கம், போராட்டம் என்று - குடும்பம், மனைவி, பாசம், பற்று இவை முற்றிலும் அற்ற துறவியாய்த் தன் கணவர் அலைந்து திரியும் போக்கினை எண்ணி இரங்கி, 'நைந்துருகி, உடல் இளைத்து, அம்மையார் இறுதி எய்தினார்கள்! இந்த இழப்பால் தமக்கு லாபமா? நட்டமா? துக்கமா? மகிழ்ச்சியா? எனப் பெரியாராலேயே முடிவு கட்ட இயலவில்லை ! வருங்காலத்தில் தமது புதிய ஈரோடு வேலைத் திட்டத்தின் விளைவாய்ப் பயங்கர சூழ்நிலைகள் உருவாகலாம்; அம்மையார் அப்போது இல்லாதிருப்பதே நிம்மதி; மிச்சமிருக்கும் காலத்தில் நிரந்தர வாசம் இல்லாமல், சுற்றிச் சுழன்று வர, அம்மையார் இருந்தால் தடையாகத் தோன்றலாம், என்றே பெரியார் கருதினார்!

தமது பொதுப்பணிக்கு எதுவுமே இடையூறாக இருத்தலாகாது எனுங் கருத்துக் கொண்டவர் பெரியார். இறப்புகளையும் அவ்வாறே கருதினார்; சிறப்பெதுவுமில்லை , சாவுகளுக்கு! தமது அண்ணன் மகன் 10 வயது முதல் லண்டனில் படித்து ஊருக்கு வந்திருந்த நேரம், என்புருக்கி நோயினால் தாக்கப்பட்டு மாண்டபோது, சுற்றுப் பயணத்திலிருந்தார். தமது மாமனார் தம் வீட்டில் வந்து தங்கியிருந்த போது, நோயுற்று மாண்டநேரம், சென்னையிலிருந்தார். அண்ணனின் முதல் மனைவி - அவர்கள் பெயரும் நாகம்மாள் - இறந்த அன்றே வெளியூர் புறப்பட்டார். அதேபோல அன்னை நாகம்மையார் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருந்த போதும் திருப்பத்தூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கே தமது ஈரோடு வேலைத் திட்டத்தை விளக்கி முழக்குகிறார்:- ‘அரசியல் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் மாற்றங்கள் செய்யாமல் வெறும் சமுதாய முற்போக்குக்காக எதற்குச் சுயமரியாதை இயக்கம்? அதேபோல் சாதி மதம் வர்ணாசிரமம்; வேதம் புராணம் இதிகாசம் எல்லாம் இருக்க வேண்டும்: மன்னர் மிட்டா மிராசு பிரபுக்கள் இருக்க வேண்டும்; வெள்ளைக்காரன் மட்டும் வெளியே போக வேண்டும் என்றால் என்ன நியாயம்? ஆகையால் காங்கிரசோ, தேசியமோ, காந்தியமோ, சுயராஜ்யமோ இவை யாவுமே சுயமரியாதை இயக்கத்துக்கு வைரிகள்- அழிக்கப்பட வேண்டியவை’ - என்று மக்கள் மனநிறைவு கொள்ளும் வண்ணம் ஒப்புக்கொள்ளத் தக்க விதமாகத் தமது வாதங்களை எழுப்பிக் காட்டிவிட்டுத்தான், மனைவியின் மறைவு காண ஈரோடு வந்தார் பெரியார்.

என்னதான் பகுத்தறிவுத் தந்தையாயினும், கல்நெஞ்சு கொண்டவரல்லவே; ஏழையர்பால் கசித்துருகித்தானே சமதர்மக் கொள்கை வகுத்தார்? அம்மையார் மறைந்தது குறித்துப் பெரியார்கீழடியில்லை