பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

124


செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் உடையவர்களும், சிறப்பாக எனது கூட்டுப் பணித் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக் கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து, உண்மையை விளக்கிவிட வேண்டும் என்றே இந்த ஸ்டேட்மெண்ட்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனாவேன்.

இதனால் பொது ஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலம் ஏற்படக்கூடும். ஆதலால் என் மீது சுமத்தப்பட்ட இவ்வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்ட்டை மாத்திரம் கொடுத்துவிட்டு, எதிர் வழக்காடாமல், இப்போது கிடைக்கப் போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி. அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லையென்று நியாயத்தையும் சட்டத்தையும் இலட்சியம் செய்து, வழக்கைத் தள்ளிவிட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன்.”

இந்த வழக்கையொட்டிப் பெரியார் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பக்கத்து அறையில் இராஜாஜி இருந்தார். ஜெயிலைப் பற்றிப் பெரியாரின் பொதுவான கருத்து அவர் வாய் மொழியாகவே:- “ஜெயில் என்பது ஒரு பூச்சாண்டி. ஜெயிலுக்குப் போன பலர் தங்கள் தரத்துக்கு மேல் வாழ்வும் சுகமும் அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். நான் ஜெயிலுக்குப் போன சுமார் 19 முறைகளில் 4 தரம் A. B கிளாஸ் ஏற்படாத C கிளாஸ் கைதியாக மண்சட்டியிலே கஞ்சியும் சோற்று மொத்தையும் வாங்கிக் கல்லையும் புழுவையும் பொறுக்கி எறிந்து விட்டுச் சாப்பிட்டவன். இன்று காங்கிரசில் அப்படிப்பட்டவர் ஒருவர்கூட இல்லை (18-8-1961).

இராஜாஜி அவர்களின் பக்கத்து அறையில், நான் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்ததற்காக சுய மரியாதைக் கைதியாக இருந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் தோழர்கள் தாங்கள் உள்ளே இருக்கிறோமே என்று கருதி மனக் குறைப்பட்டிருப்பார்களே ஒழிய, மற்றபடி வீடு போன்ற சகல வசதிகளுடன், ஒரு நாளைக்குப் பொங்கல், ஒரு நாளைக்குத் தத்தியோதனம், அக்காரவடிசில் (சர்க்கரைப் பொங்கல்) பாயசம், பலகாரம் முதலிய நல்ல உணவுடன்தான் இருந்தார்கள். எனக்குக்கூட அதில் நல்ல பங்கு கிடைத்தது. ஜெயிலுக்குப் போனதற்காகவே காங்கிரசில் ஒருவர்கூடச் சாகவில்லை. என் இயக்கத்தில் 10, 15 பேர் செத்தார்கள்!