பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஆகையால் ஜெயிலுக்குப் போனதே யோக்கியதாம்சம் என்றால் அது மூன்றாம் தர யோக்கியதாம்சம் என்று மறுபடியும் சொல்கிறேன். ஜெயிலுக்குப் போகாத பார்ப்பனர் - காங்கிரசையும் காந்தியாரையும் ஆபாசமாய் வைத பார்ப்பனர்கள் - எத்தனை பேர் காங்கிரஸ் ஆட்சியில் பதவி வகிக்கிறார்கள்!

இந்த வழக்கை ஒட்டிச் சிறையிலிருந்து வந்த காலத்தில், கோவைச் சிறையில் முன்பே அடைக்கப்பட்டிருந்த இராஜாஜியைப் பெரியார் சந்திக்க நேர்ந்தது. எந்த வகையிலேனும் பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குள் வளைத்துப் போடவேண்டும் என்ற பேரவா இராசகோபாலாச்சாரியாருக்கு! தந்திரமாகவும், சாமர்த்தியமாகவும் பேசத் துவங்கினார். பொதுவான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. முதலாவதாகக், கடவுள், மத எதிர்ப்புப் பிரச்சாரத்தைப் பொது மேடைகளில் கலவாமல் தனிப்பட்ட கொள்கையாக அவரவர் கடைப்பிடிப்பது; இரண்டாவது, அரசுப் பதவி, அலுவல்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை அமல் செய்யப்பட வேண்டும் என்பது. காந்தியாரிடம் கலந்து பேசி வருவதாகக் கூறிய ராஜாஜி, பின்னர், காந்தியார் வகுப்பு வாரி உரிமை விவகாரத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்பதாகவும், ஆனால் பெரியார் காங்கிரசுக்குத் திரும்பிட வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார். உண்மையில் ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தபோது, அங்கே சந்தித்த இராஜாஜிதான் வஞ்சகமாகக், காந்தியடிகள் இத்திட்டத்தை ஏற்காதவாறு செய்தார், என்று ஒரு செய்தி பரவியது. நெருப்பில்லாமல் புகையாதல்லவா?

காங்கிரஸ் கட்சி பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. அதனால் தமது திட்டத்தைப் பெரியார் நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்தார். உழுவோர் கடன் தொல்லையால் அவதிப்படாமல், லேவாதேவிக்காரரிடமிருந்து காப்பாற்றப்படக் கூட்டுறவு வங்கிகள் ஏற்படுத்தல்; சொத்துகளை பினாமி பெயரில் எழுதுவோர் வழக்காட முடியாமல் சட்டம் இயற்றுதல்; உழவர்க்கும் வணிகர்க்கும் இடையே தரகர் சுரண்டாவண்ணம் அரசு சார்பில் அமைப்புகள் உண்டாக்குதல்; இன்ஷ்யூரன்ஸ் தொழிலை அரசே மேற்கொள்ளல்; தொழிலாளர் மற்றும் பொதுமக்களின் வருவாய் பெருகிட வகைசெய்தல்; எல்லா மக்களுக்கும் கட்டாயமாக ஆரம்பக் கல்வி தருதல்; மதுவை ஒழித்தல்; தீண்டாமை மற்றும் பிறவியால் உயர்வது, சமூகத்தில் மூடநம்பிக்கை பெருகுவது ஆகியவற்றைச் சட்ட மூலமாக ஒழித்தல்; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஏற்படுத்தல்; நிலவரி, நிலத்தின் அளவுக்குத் தக்கவாறு, படிப்படியே உயர்த்தப்படுதல்; உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி, அரசு மேற்பார்வையில் நடத்துதல்;