பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

126


அரசு நிர்வாகச் செலவைக் குறைத்தல் - ஆகியவை ஈரோடு வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள். நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன் இவை எவ்வளவு புரட்சிகரமானவை? இப்போது இவற்றில் யாவுமே நடைமுறைக்கு வந்துவிட்டன, பெரியாரின் விருப்பத்திற்கேற்ப.

1934 செப்டம்பர் 29, 30-ல் சென்னையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பெரியாரின் ஈரோடு வேலைத் திட்டம் பரிசீலனைக்கு வந்தது. நீதிக் கட்சியினைத் தோற்றுவித்த டாக்டர் டி.எம். நாயர் 1919-ஆம் ஆண்டிலும், சர் பி. தியாகராயர் 1925-ஆம் ஆண்டிலும் மறைந்தார்கள். இப்போது கட்சியின் தலைமைப் பீடத்தில் பொப்பிலி அரசர் வீற்றிருந்தார். 1932 முதல் 1937 வரை இவர் சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பிலிருந்தார். பெரியாரிடத்தில் அளவற்ற மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தவர் இவர்.

இதை நன்கு அறிந்து வைத்திருந்ததால்தான் பெரியார். தம்மை ஈரோட்டில் வந்து சந்தித்து உரையாடி மகிழ்ந்த ஜெயப்பிரகாச நாராயணன் எவ்வளவோ வேண்டியும், காங்கிரசில் மீண்டும் சேர மறுத்து விட்டார்!

ஒரு குழுவினை அமைத்து, ஈரோடு வேலை திட்டத்தைப்பற்றி ஆராயுமாறு பொப்பிலி அரசர் பணித்தார். திட்டத்தை எப்படியும் ஒப்புக் கொள்வதாகப் பெரியாரிடமும் வாக்களித்தார். 1934-ல் டெல்லியிலுள்ள இந்திய சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிக்குமாறு பெரியாரிடம் வேண்டினார். பெரியாரும் ஏற்றுக்கொண்டு, தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்.

1920- ல் சுயராஜ்ய நிதி 1 கோடி ரூபாய், 1926-27-ல் கதர் நிதி 30 லட்சம் ரூபாய், 1934-ல் அரிசனநிதி 30 லட்சம் ரூபாய் வசூலித்துப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் தேர்தலுக்கும் காந்தியார் செலவிட்டதாகப் பெரியார் இந்த நேரத்தில் குற்றம் சுமத்திப் பேசி வந்தார்.

பெரியார் முதன் முதலில் 1934-ல் நீதிக் கட்சியைத் தேர்தலில் ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார். அக்டோபர் 12-ம் நாள் கோயமுத்தூர் டவுன்ஹாலில் சொற்பொழிவாற்றினார். மேல்நாட்டுப் பாணியில் கூட்ட இறுதியில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். பெரியாரின் வாதத்திறனும் கூர்ந்த மதியும் இங்கு வெளிப்படக் காணலாம்:

கேள்வி: ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியா யிற்றே; அதை நீங்கள் ஆதரிக்கலாமா?

பதில்: ஆம்; ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சிதான். ஆனால் காங்கிரஸ்காரர்கள் 30, 40 வருட காலமாய் ஆடி வந்த உத்தியோக வேட்டையைத்தான், ஐஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வேட்டையாடிப் பிடிக்கிறார்களே தவிர வேறில்லை, ஆனால், காங்கிரஸ்