பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
 11. எதிர்த்தார்
இந்திப்போர் - முதல் பரணி - சிறை வாழ்வு - நீதிக் கட்சித் தலைவர் - திராவிடநாடு திராவிடருக்கே முழக்கம் உதயம் - 1938 முதல் 1943 வரை

துஞ்சு புலி இடறிய சிதடன்போலத் தமிழ் மக்களின் உணர்வினை உசுப்பிட முனைந்தார் சென்னை மாகாணப் பிரதமராகப் பதவி ஏற்ற சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார். காங்கிரசின் வேலைத் திட்டங்கள் எத்தனையோ இருக்க, மிக்க அவசரமாகக், காங்கிரஸ் ஆண்டுவந்த எட்டு மாகாணங்களில் வேறெந்த மாகாணத்துக் காங்கிரஸ் மந்திரி சபையும் முயற்சி எடுக்காத நேரத்தில், இவர் மாத்திரம் முந்திக்கொண்டு, இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும், என முதலில் அறிவிப்புச் செய்தார், 1938 பிப்ரவரி 25-ஆம் நாள். 25-4-38-ல் அது நடைமுறைக்கு வந்தது.

தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை; தாய் மொழியில் பற்றுச் செலுத்தாதிருக்கும் வரையில் தமிழர்கள் முன்னேற்றம் அடைய மாட்டார்கள் - என்று காங்கிரசில் இருந்தபோதே பெரியார், 1924-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாகாண மாநாட்டுத் தலைமையுரையில் குறிப்பிட்டுள்ளார். பின்னரும், இந்தி பொது மொழியாக வேண்டுமெனக் காங்கிரசார் வற்புறுத்துவதன் இரகசியம் என்ன என்பதை 1926-ஆம் ஆண்டு “குடி அரசு” இதழில் விளக்கியுள்ளார்:- “100க்கு 97 பேராயுள்ள பார்ப்பனரல்லாதார் செலவில், 100க்கு 3 பேரேயுள்ள பார்ப்பனர்கள், 100க்கு 100 பேரும் இந்தி படித்துள்ளனர். ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே, ஒரு ஒடிந்து போன குண்டூசி அளவு பயனும் இல்லாத இந்தி மொழியை, இங்குப் பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், தமிழ் மொழி வளர்ச்சிக்காக இதில் 100-ல் 1 பங்கு கவலையாவது இவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்படும் பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாக முடியும் போலிருக்கிறது!” வரும்பொருள் உணர்ந்து பெரியார், அன்றே உரைத்த மொழி இது. மேலும் தொடர்ந்து “குடி அரசு” இதழில் எச்சரித்து வந்திருக்கிறார் பெரியார். 1930-ஆம் ஆண்டு நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவைக்