பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

148


கண்டித்துத் தீர்மானம் இயற்றியுள்ளனர். இந்தி மொழி கட்டாயமானால் தமிழ் வளர்ச்சி குறையும்: தமிழர் நலம் குன்றும்; தமிழர் நாகரிகம் அழியும் என்றார் பெரியார். மலைமலையடிகளாரும், இந்தி பொது மொழியாவதற்குத் தகுதியுடையதன்று; இந்தி நுழைப்பால் தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் - எனக் கட்டுரை தீட்டினார்.

தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பு ஏற்படும் என எதிர்பார்த்தே ஆச்சாரியார், கட்டாயப் பாடமாக்குவேன் என உறுதியாய்க் கூறிவிட்டார். தமிழர் உணர்வோடு விளையாடுவது எனத் திட்டமிட்டே இறங்கியிருக்கிறார்! மேலும், பெரியாரின் சூறாவளி வேகச் சுயமரியாதைப் பொதுவுடைமைப் பிரச்சாரத்துக்கு மக்களிடையே பெருவாரியாக ஏற்பட்டு வரும் செல்வாக்கு கண்டு, தமது இனநலன் அழிக்கப்பட்டுவிடுமே என அஞ்சித், திசை திருப்பும் சாணக்ய தந்திரமாகவும் ஆச்சாரியார் இந்தி நுழைப்புப் பணியினைக் கருதினார். 1937 டிசம்பர் 26-ல் திருச்சியில் தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் முயற்சியால், நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் ஒரு தமிழர் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் கலந்து கொண்டார். இதில் கட்சி, சாதி, மத பேதமின்றி, வைதிகர் உட்படத் தமிழர் அனைவரும் குழுமினர். இந்தி நுழைப்புக்கு எதிர்ப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் கோரல், தனியான தமிழ் மாகாணம் வேண்டல் - ஆகிய முக்கிய தீர்மானங்கள் இங்கு நிறைவேறின. பெரியாரின் உழைப்பினுடைய உருவந்தான் அங்கே அனைவர் சிந்தனையிலும் ஊடுருவிக் காணப்பட்டது. தொடர்ச்சியாகக் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் எதிர்ப்பு உணர்ச்சி வெளிப்படுத்தப்பெற்றது. புத்துயிரும், புதுவன்மையுங் கொண்டவராய்ச் சிலிர்த்தெழுந்தார் பெரியார்!

தமிழவேள் உமாமகேசனார் உறவினரும், வழக்குரைஞருமான திருச்சி தி.பொ. வேதாசலம் பெரியாரிடம் மெய்யன்பு பூண்டவர், நேர்மையும் ஒழுக்கமும் அடக்கமும் அறிவும் மிகுந்தவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான விரிவுரைகள் ஆற்றவல்லவர். பெரியாருக்கும் இயக்கத் தொண்டர்களுக்கும் இவர் இல்லம் திருச்சியில் நல்லதோர் உறைவிடமாகும். பெரியார் பிற்காலத்தில் திருச்சியில் தங்குமிடம் அமைக்க இவரே காரணம். எதனாலோ தமது இறுதி நாட்களில் பெரியாரிடம் கருத்து வேறுபாடு கொண்டார். 1971- அக்டோபர் 10 ஆம் நாள் மறைந்தார். இடுகாட்டில் இரங்கலுரை ஆற்றினார் பெரியார்.

1899-ல் பிறந்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருச்சியில் புகையிலை வணிகர். மேலான, ஆழ்த்த தமிழ்ப் புலமை வாய்ந்த சான்றோர். பெரியாரின் துணையாகச்