பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சில ஆண்டுகள் பழகியவர். சுயமரியாதைக் கொள்கைப்பற்றுடன் விளங்குபவர். எண்ணற்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடத்தி வருகிறார். தமிழுக்கு ஊறு, யாரால், எப்போது, எங்கே நேர்ந்தாலும் எதிர்த்து முதல் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் முதுமையிலும் இளைஞராய், ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

பின்னர் 1938 பிப்ரவரியில் காஞ்சியில் அ.க. தங்கவேலர் முயற்சியால் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்தப் பெற்றது. சர் கே.வி. ரெட்டிநாயுடு தலைவர். முன்னாள் சட்ட உறுப்பினர் சர்.எம். கிருஷ்ணன் நாயர் திறப்பாளர். பெரியார் இங்குதான் இந்தி எதிர்ப்புப் போர்ப் பிரகடனம் செய்தார்; போர் போர் போர் என முழங்கினார்; போராட்டம் துவங்கிவிட்டது!

இந்தி கட்டாயப் பாடமாகத் திணிக்கப்படுவது, பொதுவான விஷயம்; அனைவருடைய வரிப்பணத்தில் இருந்துதான் இது செய்யப்படுகிறது; இதைத் தட்டிக் கேட்க வேண்டியது நம்முடைய கடமை என்றார் பெரியார். இந்தி கட்டாயமானால் இந்து மதக் கலாச்சாரம் தொடர்ந்து ஆக்கம் பெறும்; வட நாட்டாரின் அரசியல் ஆதிக்கம் இங்கு நிலைபெற வழி வகுக்கும் - எனவும் எடுத்துக் காட்டினார். இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது: அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்! அவை என்ன? பார்ப்பனியத்துக்குத் தமிழ் மக்களைப் புராண காலம்போல் நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதற்கேயாம், சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்திருக்கும் பார்ப்பனீய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடிப் புகுத்துவதற்கேயாம்! இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், தமது சரீரத்தில் ஓடும் பார்ப்பன மதஉணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியேற்றப்பட்டுப் புதிய பகுத்தறிவு ரத்தம் பாய்ச்சப்படவேண்டும் - என்றார் பெரியார்.

ஆச்சாரியார் உறுதியில் பின்வாங்க மறுத்தாரேனும், சிறிது தளர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அதாவது, எல்லாப் பள்ளிகளிலும் என்று எடுத்த முடிவு தேய்ந்து, 125 பள்ளிகளில் மட்டும் என்றும்; முதல் மூன்று ஃபாரங்கள் வரையிலுந்தான் என்றும்; அதிலும் தேர்வில் வெற்றிபெற வேண்டுமென்று அவசியமில்லை என்றும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும், சூதான உள்நோக்கத்தை நீண்ட நாட்களாகப் புரிந்தவராதலால், ஆச்சாரியாரை நம்பவில்லை பெரியார் மேலும் அவர் தலைமையில் அமைச்சர்கள் எட்டு பேர்; சட்டமன்றத் தலைவர், மேலவைத் தலைவர் ஆகிய பத்துப் பதவிகளில், ஆறு இடங்களில் பார்ப்பனரே இருந்தனர். 12 லட்சம் ரூபாய் செலவில் புதிய வேதபாடசாலை அமைத்து, அதில் பல பார்ப்பன ஆசிரியர்கட்கு வேலையும் அளித்தார் ஆச்சாரியார். மாறாகச் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல் செய்வதாகவும், அந்த இழப்பினை ஈடுகட்டக்