பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

150


கிராமப் புறங்களில் ஏழை மக்கள் கல்விக்காக நீதிக்கட்சியினரால் துவக்கப்பட்டிருந்த 2200 ஆரம்பப் பள்ளிகளை மூடிவிடுவதாகவும் ஆச்சாரியார் ஆணையிட்டார். பொற்கொல்லர்கள், தம் பெயருடன் ஆச்சாரி என்ற அவர்களது சாதிப்பட்டத்தை இணைப்பதால் தமது சாதிப் பெருமை குறைவதாக எண்ணி, அவ்வாறு அவர்கள் குறிப்பிடக் கூடாது எனவும் ஆணையிட்டார் சக்கரவர்த்தி இராஜகோபால ஆச்சாரி!

நயவஞ்சகமான ஆச்சாரியாரின் போக்கினை நன்கு அறிந்ததால், பெரியார் காங்கிரசை ஒழிக்கவே இந்தியைக் கருவியாக எடுத்துக் கொண்டு போர் துவக்கியதாக, மற்றவர்கள் குற்றம் சுமத்திய போதும், அவற்றையெல்லாம் துச்சமென ஒதுக்கித் தள்ளிப் பெரியார் குதித்தார் போர்க்களத்தில்; இந்திப் பரணி பாடினார்!

1938-ஆம் ஆண்டு ஜுன் 4-ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் துவங்கப் பெற்றது. பெத்து நாயக்கன் பேட்டை இந்து தியாலாஜிகல் பள்ளி முன்பும், பிரதமர் (முதல் மந்திரி) இல்லத்தின் முன்பும் ஒரு சர்வாதிகாரி தலைமையில் ஒவ்வோரணியினராக மறியல் செய்தனர். ஒரு சர்வாதிகாரி கைதான பின் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல், இப்படியாக ஏராளமான தாய்மார்கள் (குழந்தைகளுடன்) தமிழ்ப் பற்றுள்ளோர், புலவர், ஆசிரியர், துறவிகள், மக்கள் தொண்டர்கள், மாணவர்கள் - இந்தி எதிர்ப்புக் களத்தில் இன்முகத்துடன் இறங்கினர். பல்லடம் பொன்னுசாமி முதலமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பட்டினிப் போர் தொடங்கிக் கைதானார். ஸ்டாலின் ஜெகதீசன் அவரை அடுத்து உண்ணாவிரதம் தொடங்கிச், சாகும் வரையிலும் தொடர்வதென இருந்தார்; அரசுத் தரப்பில் இவருக்கு வஞ்சக வலை விரிக்கப்பட்டு, ஏமாந்து அதில் சிக்கிவிட்டார் இறுதியில்!

காங்கிரஸ்காரர் ஒத்துழையாமைப் போர் நடத்திய காலத்தில், அவர்கள் மீது வெள்ளை அரசால் வீசப்பட்டு, அவர்களால் அப்போதெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட, அதே கிரிமினல் திருத்தச் சட்டத்தையே, இந்தி எதிர்ப்புத் தொண்டர்களின் மீது ஏவிக், கைது செய்து, கடுமையான தண்டனைகளை வழங்கியது ஆச்சாரியார் அரசு அடக்குமுறைக் கொடுமை தாளாது, அக்காலத்திய சில காங்கிரஸ் சார்பு ஏடுகள் கூடக் கண்டித்து எழுதின. நடுநிலையாளரான பல பார்ப்பனப் பிரமுகர்களும் வன்முறைகளை எதிர்த்துக் கருத்துக் கூறினர். சத்தியமூர்த்தி அய்யரோ, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்வோர் மீது ராஜத்து வேஷக் குற்றம் சுமத்தித், தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென அரசுக்கு ஆலோசனை கூறினார்! தயாள குணசீலர்!

கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆக்ட் 7-3- பிரிவின்படிக் கைதானவர்கள் மீது, வழக்குப் போட்டுக், கடுங்காவல் தண்டனை 3,4