பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


மாதங்கள்வரை தந்து, மொட்டையடித்துச் சிறை உடை அணிவித்துக், குல்லாய் போட்டுக், களியும் கூழும் உணவாகத் தந்து வந்தது ஆச்சாரியார் ஆட்சி| இதற்கெல்லாம் அஞ்சாமல் அன்றைக்கு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை, என மகிழ்வோடு சிறை ஏகியவர்கள் எண்ணிக்கை 1269 ஆகும். இதில் பெண்டிர் 73 பேர், மதலையர் 32 பேர்,

மேலும், இந்தியன் பினல்கோட் 117 பிரிவின்படி சி.டி. நாயகம், கே.எம். பாலசுப்பிரமணியம், ஈழத்துச் சிவானந்த அடிகள், சண்முகானந்த சாமிகள், சுவாமி அருணகிரிநாதர், பாலசுந்தரப் பாவலர், மறை. திருநாவுக்கரசு, டி.ஏ.வி. நாதன், சி.என். அண்ணாதுரை ஆகியோரைக் கைது செய்து, சிறையிலிட்டு, 3 ஆண்டு தண்டனை வாங்கித்தர முயற்சிகள் நடந்தன. 1938-ஜூன் 26-ல் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு, சென்னைக் கடற்கரையில், பெரியார் தந்த வாசகங்களான தமிழ் வாழ்க, இந்தி ஒழிக, காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்பனவற்றை மண்ணதிர முழக்கமிட்டனர்.

செ.தெ. நாயகம் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராயிருந்த தமிழ்ச் சான்றோர். பெரியாரிடம் மிக்க அன்புடையார். குலசேகரன் பட்டினத்தில் தமிழ்க் கல்லூரி துவக்கினார். 1944-ல் மறைந்தார்.

டி.ஏ.வி. நாதன் ஆங்கிலமும் தமிழும் பாங்குற எழுதவல்ல வழக்கறிஞர். “ஜஸ்டிஸ்”, “விடுதலை” ஏடுகளின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார்.

முகவை மாவட்ட வெங்கலக்குறிச்சியில் 15-9-1907-ல் பிறந்த பாலசுந்தரப் பாவலர் சுயமரியாதைக் குடும்பத்தின் தலைசிறந்த புலமைத் தொண்டர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; பராசக்தி நாடக ஆசிரியர். “தென்சேனை”, “தமிழரசு” இதழ்கள் நடத்தினார். 1938-ல் சிறைசென்றவர் திராவிடர் கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தண்டனை பெற்றவர், புதுக்கோட்டை ‘பிராமணாள்’ அழிப்புப் போராட்டத்தில், மனைவி பட்டம்மாள், மகள் அறிவுக்கொடி, மகன் தமிழரசனுடன் கலந்து கொண்டார். சென்னையில் பொது மருத்துவமனையில் 1.4.1971 இரவு 10 மணிக்கு மறைந்து, 3-ந் தேதி அடக்கம் செய்யப்பட்டார். குடும்பத்தார் இன்றும் கழகப் பணியில் முன்னணி.

ஈழத்தடிகள் இல்லறத்தில் ஈடுபட்டுக் காஞ்சியில் அண்ணாவின் ஆதரவில் நீண்ட நாள் வாழ்ந்திருந்தார்.

மறைமலையடிகளாரின் மகனார் திருநாவுக்கரசு. தனித்தமிழ் அன்பர். இனித்திடும் பண்பாளர்.