பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வீரக்கர்ச்சனை புரிந்துவந்த கிழச்சிங்கம் இப்பொழுது ஓய்வு பெற்றிருக்கிறது. சிறையில் தலை நிமிர்ந்து கிடக்கிறது - என்ற முடித்திருந்தார்.

பெரியார் சிறையேகிய பின்னர்தான், சென்னை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த தாளமுத்து, நடராசன் என்னும் இரு மாவீரர்கள் அடக்குமுறை காரணமாய், சிறையிலேயே உயிர் நீத்துக் களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15-ஆம் நாள் நடராசனும், மார்ச் 13-ஆம் நாள் தாளமுத்துவும் மாண்டனர். தமிழகமே கொந்தளித்துக் குமுறியது.

முதல்முறை யென்றாலும், 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போர் உலக வரலாற்றில் மேலான இடம் பெறத்தக்கதாகும். தமிழ் நாட்டிலேயே, தமிழ்நாட்டார், தமிழ் வாழ்க என்று முழங்குவதற்காகத் தண்டிக்கப்படும் கொடுமையை நடுநிலையாளர் கண்டித்தனர். தமிழ் நாட்டின் வீரமகளிர், சென்னையில் 1938 நவம்பர் 13-ஆம் நாள், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு என்ற பெயரில், மறைமலையடிகளார் மகளாரும் திருவரங்கனார் துணைவியாருமாகிய நீலாம்பிகை அம்மையார் தலைமையில் உணர்ச்சியுடன் கூடினர். பெரியாரின் தீரமிக்க சொற்பொழிவைக் கேட்டுத் தன்மானக் குருதி சூடேறத் தாமும் மறியலில் பெருமளவில் ஈடுபடத் துணிவு கொண்டனர். இந்த மாநாட்டில் தீர்மான வடிவமாக, இனித் தோழர் ஈ. வெ. ராமசாமிப் பெரியாரை அனைவரும் பெரியார் என்றே அழைத்திடல் வேண்டுமென முடிவு செய்தனர்.

அடுத்து, வேலூரில் 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் சர் ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை மாகாணத் தமிழர் மாநாடும், பண்டித நாராயணி அம்மையார் தலைமையில் பெண்கள் மாநாடும் எழுச்சியுடன் கூடி, இனித் தமிழர்களின் தலைவர் பெரியாரே என்றும், எந்நாளும் அவர் மொழிவழி நடப்பதாகவும் உறுதி பூண்டது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் 1938 டிசம்பர் 29, 30, 31 நாட்களில் நீதிக்கட்சியின் 14-ஆவது மாகாண மாநாடு எழுச்சியும் உணர்ச்சியும் பொங்கிடக் கூடியது. லட்சக்கணக்கான, மக்கள், பெரியார் இல்லாமல் நடைபெறும் இந்த மாநாட்டில் கடமையுணர்ச்சியோடு குழுமியிருந்தனர். மாநாட்டின் தலைவராக, முன்னரே பெரியாரைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர்.

பெரியார் பெல்லாரி சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பதுபோல் வடிவு அமைக்கப்பட்ட அலங்கார வண்டி ஊர்வலமாய் வந்தது. மாநாட்டு மேடையில் தலைவரின் நாற்காலியில் பெரியாரின் உருவப் படம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது. என் தோளுக்குச் சூட்டிய மாலையைப் பெரியாரின் தாளுக்குச் சூட்டுகிறேன் - என்று நன்னீர்மை கொண்ட பன்னீர் செல்வனார் நாத் தழுதழுக்கத் தமது பெருமீசை துடிதுடிக்கக் கூறித் தமக்களித்த மாலையைப் பெரியார் படத்துக்குச்