பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

156


சூட்டினார். பெரியாரால் முன்பே தயாரித்துத் தரப்பட்டிருந்த தலைமையுரையை இவரே படித்தார். சிறையிலடைபட்டிருந்த சிங்கம், இந்தத் தங்கத் தமிழ் நாட்டுக்குப் பங்கம் நேராமல் பாதுகாத்திட, நீதிக் கட்சியின் தலைவராக ஒரே மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட்டில் குழுமியோர் அனைவரும் ஒரு முகமாக எழுந்து நின்று, எங்கள் மாபெருத் தலைவரே! உங்கள் உடல் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திருவுருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கின்றோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும், சொல்வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம் என உறுதி கூறுகிறோம் - என்னும் உறுதி மொழியிளைத் தமிழிலும், தெலுங்கிலும் எடுத்துக் கொண்டனர்.

பெரியார் தமது தலைமையுரையில், தாம் நிதிக் கட்சியில் தலைவரானதால் சுயமரியாதை இயக்கத்தின் எந்தக் கொள்கைக்கும் எள்ளளவு ஊனமும் நேரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். இந்து மதப்படிச் சூத்திரர்தான் உழைப்பாளர், தொழிலாளர் பார்ப்பனரல்லாதவர் எல்லாம் நாம் எல்லாரும் திராவிடர் என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள். உலகில், எல்லா மக்களுமே உழைத்து, உழைப்பின் பலனை விகிதாச்சாரப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும். தேசபக்தி, தேசியம், தேசவிடுதலை, ஆத்மார்த்தம், பிராப்தம் என்று சொல்லி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் போக்கை அடியோடு ஒழிக்க வேண்டும் - இதற்கு ஒரே பரிகாரமாகத் தமிழ்நாடு தமிழருக்கே ஆகவேண்டும் - என்றெல்லாம் பெரியார் நன்கு விளக்கம் அளித்தனர். இளமைப் பிராயத்தில் இயல்பாக அவருள் கருவாகிக் கிளர்ந்தெழுந்த சிந்தனைச் செல்வமே, கொள்கையாய்க் கோட்பாடாய் இலட்சியமாய் இயக்கமாய்ப் பேச்சாய் எழுத்தாய் வழக்காய் போராட்டமாய் வெற்றியாய் உருவும் திருவும் பெற்றுப் பற்பல பரிமாணங்களில் பரிணாம வளர்ச்சியாய்ப் பல்கிப் பெருகி வந்ததைத் தெளிவாகக் காண முடிகின்றது. அடிப்படையில் அணுவளவு மாற்றமும் செய்யாமல், கட்டடத்தின் முதல் தளம், இரண்டாந்தளம், மூன்றாந்தளம் என வசதிக்கும் வாய்ப்புக்கும் நேரத்துக்கும் தேவைக்கும் ஏற்ப எழுப்பிச் செல்வதுதான் அவரது நடைமுறை என்பதும் நுட்பமாய்க் காண்போர்க்குத் திட்பமாய்ப் புரியும்.

தமது அறுபதாவது வயதில், அரசு ஊழியராக இருந்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கிடக்கவேண்டிய வயதில் பெரியார் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெயிலின் வெம்மை அதிகமாகத் தாக்கும் பெல்லாரி சிறையில், அடக்குமுறைக் கொடுமைகளால் அவதியுற்று, உடல் நலிந்து, வயிற்று நோயினால் துன்புற்று வந்தார். வெளியிலிருந்து,