பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


வெயிலின் கொடுமையைவிடக் காங்கிரஸ் புதிய ஆட்சியின் அடக்குமுறைக் கொடுமையை அதிகம் அனுபவித்து வந்த தமிழ் மக்கள், பெரியார் வாழ்க எனச் சந்து பொந்துகளிலும் கூடச் செந்தமிழ் முழங்கிச் சிந்து பாடி வந்தனர்.

சென்னை மாகாண அரசு என்ன எண்ணிற்றோ தெரியவில்லை; 1939-ஆம் ஆண்டு மே திங்கள் 22-ஆம் நாள் எந்தக் காரணமும் அறிவிக்காமல் திடீரென்று பெரியாரை விடுதலை செய்து விட்டது. 190 பவுண்டு எடையுடன் சிறை சென்ற பெரியார், ஆச்சாரியார் ஆட்சிக்கு விலையாகத் தமது எடையில் 24 பவுண்டு அன்பளிப்பாக வழங்கியே வெளியில் போந்தார். தாளமுத்து - நடராசன் ஆகிய இரு இளங்காளைகளே சிறைக் கொடுமையால் உயிர்த் தியாகம் செய்ய நேர்ந்ததே! தள்ளாத வயதில் பெல்லாரிச் சிறையில் வாடும் தலைவர் பெரியாரை நாம் உயிருடன் காண்போமா? என அய்யுற்றுக் குமைந்த தமிழ் மக்கள் களிப்பால் கூத்தாடினர் ஊருக்கு ஊர் வரவேற்பும், பணமுடிப்பு வழங்கலும் போட்டி போட்டுக் கொண்டு நடைபெற்ற வண்ணமிருந்தன!

விடுதலை பெற்று வெளிவந்தவுடன், சென்னையில் தம்மைச் சந்தித்த பத்திரிகை நிருபர்களிடம் பெரியார், இந்தி எதிர்ப்பு இயக்கம் தொடரும் எனவும், புதிதாகக் காங்கிரஸ் அரசால் விதிக்கப்பட்டுள்ள வணிக விற்பனைவரி அநீதியானது என்றும், ஆந்திரா தனி மாகாணமாக அமைக்கப்பட வேண்டும் என்றும், தமது தலைமையில் நீதிக்கட்சி தன்மானச் சமதர்ம அடிப்படையிலேயே இயங்கும் எனவும் விரிவாக எடுத்துரைத்தார்.

அவ்வாறே, கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதும், மீண்டும் இந்தி எதிர்ப்பு மறியல் மிக உத்வேகத்துடன் தொடங்கியது. ஏற்கனவே தண்டிக்கப்பட்ட தோழர்கள் இன்னும் சிறையில் வாடத், தம்மை மட்டும் விடுவித்தனரே, எனச் சங்கடமும் சஞ்சலமும் அடைந்திருந்த பெரியார் மனம் மகிழ, முதல் அணியாக 1939 ஜூன் 6-ஆம் நாள் சிலர் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது அணியாக 1939 நவம்பர் 15-ஆம் நாள் மீதியிருந்த தோழர்களும் சிறையின்றும் விடுவிக்கப்பட்டனர். ஆக மொத்தம் 1271 பேர் சிறைத்தண்டனை பெற்றவராவர். அரசுக்கு ஏதோ நல்லெண்ணம் முளைத்து விட்டதாகத் தவறியும் யாரும் கருதி விடக் கூடாதே என்று. “விடுதலை” அலுவலகம். நீதிக்கட்சி அலுவலகம் ஆகியவை சோதனையிடப் பெற்றுக் கண்காணிப்புக்கு இலக்காயின.

பெரியாருடைய சிறைவாசம் அவருக்கு இன்னொரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்திருந்தது. இது புதிய சிந்தனை என்பதைவிடப் பட்டை தீட்டப்படாமல் ஒளி மங்கியிருந்த ஒரு வைரக்கல்; அது சிறை வாழ்க்கையில் துப்புரவு செய்யப்பட்டுப் பட்டை தீட்டப்-