பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

158


பெற்றுச் சுடரொளி வீசுமாறு பிரகாசமாக்கப்பட்டது எனலாம். அதாவது நமது இனத்துக்கு என்று ஒரு பெயர் இல்லாதது போல, நாம் நம்மை ஏன் பார்ப்பனர் அல்லாதவர் என்று சொல்ல வேண்டும்? நூற்றுக்கு மூன்று பேராயிருப்பவர் பெயரைச் சொல்லி, நூற்றுக்குத் தொண்ணூற்றெழு பேராயிருப்பவர் - அது அல்லாதவர் - என்று சொல்லி வருவது என்ன நியாயம்? நம்மை இந்தியன் என்றும், இந்து என்றும் கருதிக் கொள்வதால் வரும் இழிவுதானே இது? எனவே சரித்திரப்படித் தமிழ் நாட்டின் பூர்வகுடிகளான நாம் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் தாமே? எனவே நமது இனப்பெயர் திராவிடர்; அவர்கள் வேண்டுமானால் திராவிடர் அல்லாதவர் என்று வைத்துக் கொள்ளட்டும். திராவிடர்களாகிய நமது நாடு திராவிடருக்கே ஆகவேண்டாமா? இவ்வளவேன்? பார்ப்பனர்கள் ஆரிய வழி வந்தவர்கள் என்பதை அவ்வகுப்பைச் சார்ந்த சரித்திர ஆசிரியர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்! எனவே நமது நாட்டில் நடைபெறுவது ஆரிய திராவிடப் போராட்டமேயாகும். இதற்கு முடிவு வடவர் பிடியிலிருந்த திராவிட நாட்டைத் தனி நாடாக்குவதே - எனப் பெரியார், 1939 - ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் நாள் “குடி அரசு” இதழில் முதன் முறையாக வெளிப்படுத்தினார். தொடர்ந்து திராவிட நாடு திராவிடருக்கே என்ற உரிமை முழக்கம் நாடெங்கணும் எதிரொலிக்கத் தொடங்கிற்று. இந்திய அரசியல் அமைப்பில் இருந்து கொண்டே, தனிநாடு ஒன்று பிரிக்கப்படவேண்டும் என்ற தத்துவத்தை உருவாக்கியவரும் உலகுக்கு அறிவித்தவரும் முதன் முதலாகப் பெரியார் ஒருவரே என்பது வரலாற்றின் மாபெரும் உண்மைக் குறிப்பாகும்!

1939-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 10-ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் மாளிகையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சியின் செயற்குழு நடைபெற்றது. அரசர்கள் கட்சி என்று அழைக்கப்பட்ட அந்த நீதிக்கட்சியைப் பயங்கர சமதர்மவாதி என அழைக்கப்பட்ட பெரியார், தமது இல்லத்துக்கே குடியேற்றிவைத்துப் பெருமை சேர்த்தனர். மேலும், ஆங்கிலேய அடிவருடிக் கட்சி என எள்ளி நடையாடப்பட்ட நீதிக்கட்சி, அதுவரை இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு அந்தஸ்து போதும் என்ற அடிப்படைக் கொள்கை தான் கொண்டிருந்தது. அதையும் அடியோடு மாற்றித் பூரணச் சுதந்திரம் வேண்டும் எனப் புரட்சியும் செய்துவிட்டார் பெரியார். இலங்கையில் துயருறும் தமிழர் நிலை குறித்தும், இந்தி எதிர்ப்புத் தொடர் போராட்டம், எதிர் வரும் ஜில்லா போர்டு நகரசபைத் தேர்தல்கள், தனி ஆந்திர நாடு அமைப்பு போன்ற விஷயங்களிலும் நீதிக்கட்சியின் செயற்குழு தனது கண்ணோட்டத்தை விசாலப்படுத்த வகை செய்தார் தலைவர் பெரியார்.