பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்தை உருவாக்கி, முதன் முதலாக இதே தலைப்பில், “குடி அரசு” 1939 டிசம்பர் 17 ஆம் நாள் இதழில் தலையங்கம் தீட்டினார். பின்னர் இந்தியாவில் இந்துக்களாலும், காங்கிரஸ் கட்சியாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை கிடைக்காது என்பதாகக் கருத்து வெளியிட்ட அனைத்திந்திய முஸ்லிம் லீக் தலைவர் முகம்மதலி ஜின்னாவை ஆதரித்து. 22 -ஆம் நாள், அவரது அறிவிப்பைப் பெரியாரும் வழிமொழிந்தார். திராவிடநாடு பிரச்சினையைத் தமக்கு 61-வது பிறந்த நாள் விழாவெடுத்த திருவாரூரில் 18-ம் தேதியும், பின்னர் காஞ்சியில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி விவாதிக்கக் கூடிய குழுவில் 31-ந் தேதியும் விரிவாக விளக்கினார் பெரியார்.

பம்பாயில் சுயமரியாதை இயக்க - நீதிக்கட்சித் தோழர்களும், டாக்டர் அம்பேத்கரும் பெரியாரின் வருகையை மிகவும் விழைந்தனர். நெடுநாளைய அவர்களது விருப்பத்திற்கு ஒருப்பட்டுப், பெரியார் தமது குழுவினருடன், ரயில் மார்க்கமாக 1940 சனவரி 6-ஆம் நாள் பம்பாய் போய்ச் சேர்ந்தார். குழுவில் “சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்ரமணியம், “ஜஸ்டிஸ்” ஆசிரியர் டி.ஏ.வி. நாதன், கே.எம். பாலசுப்ரமணியம், அறிஞர் அண்ணா ஆகியோர் இருந்தனர். டாக்டர் அம்பேத்கார் பெரியாருக்கு 6-ந் தேதி இரவு விருந்தும், 9-ந் தேதி இரவு விருந்தும், 7-ந் தேதி மாலை தேநீர் விருந்தும் அளித்துச் சிறப்பித்தார். 8-ந் தேதி இரவு ஜனாப்ஜின்னா அவர்களை அவரது இல்லத்தில், டாக்டர் அம்பேத்கரும் உடனிருக்கப், பெரியார் சந்தித்துப் பேசினார். தமது இந்தி எதிர்ப்பு பற்றி விளக்கவே, அவர்களிருவரும் ஆரவாரத்துடன் ஆதரவு தெரிவித்தனர். தனிநாடு பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தார். மூவரும் ஆங்கிலேயர்களின் பிரியத்துக்குரிய காங்கிரஸ் பிடியிலிருந்து நாட்டை எப்படி விடுவிப்பது? இந்துக்களின் கொடுமையிலிருந்து - முஸ்லிம், தாழ்த்தப்பட்ட, திராவிட இன மக்களை எப்படி மீட்பது? என்பது பற்றியெல்லாம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பம்பாய் வாழ் இயக்கத் தோழர்களின் ஊர்வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பெருமையுடன் கலந்து கொண்டு, அவர்களைப் பூரிப்பில் ஆழ்த்திய பெரியார், சனவரி 10-ஆம் நாள் புறப்பட்டார்; இந்தியா ஒரே நாடு என்ற தத்துவத்தைத் தூளாக்கும் வெடிமருந்தைத் தூவி விட்டு!

தமிழகத்திற்குத் திரும்பிய பெரியார், காங்கிரஸ் ஆட்சி ஒழிந்த பின்னும், அது புகுத்திய கட்டாய இந்தி இன்னும் ரத்தாகாத நிலை குறித்துக் கண்டித்து வந்தார். கவர்னரின் கீழிருந்த அட்வைசர் ஆட்சி, 1940 பிப்ரவரி 21-ஆம் நாள் வெளியிட்ட உத்தரவில், இந்தியை விருப்பப் பாடமாக வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருந்தது. கட்டாய இந்தி ஒழிந்ததற்குக் களிப்புத் தெரிவித்தாலும், மக்களின்