பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

160


ஈடுபடுத்தியது தவறு என்றும், அதைக் கண்டிக்கும் முகமாகத் தான் வெளியேறுவதாகவும் கூறித், தமது இருபத்தெட்டு மாத ஆட்சியை விட்டு, எட்டு மாகாணக் காங்கிரசும் பதவி விலகியது. சென்னை மாகாணப் பிரதமரான இராசகோபாலாச்சாரியார் 1939 அக்டோபர் 27-ஆம் நாள் பதவி நீத்தார். இதற்குள் சென்னை மாகாண கவர்னர் சர் ஆர்தர் ஹோப் நீதிக்கட்சியின் அரசை உடனே அமைக்குமாறு கட்சித் தலைவர் பெரியாருக்குத் தாக்கீது அனுப்பினார். ஆச்சாரியாரே பெரியாரிடம் வந்து, சண்டை சமயத்தில் அட்வைஸரி ஆட்சி நடக்க விடுவது ஆபத்து. தயவு செய்து நீங்கள் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், நானும் மந்திரியாக இருந்து, எங்கள் ஆட்களிலும் 2, 3 பேரை இருக்கச் செய்து உதவுகிறேன் என்று கூறினார்.

பெரியாரோ முன்னெச்சரிக்கையாக அக்டோபர் 25-ஆம் நாள், சென்னை அடையாற்றில் நடைபெற்ற நிர்வாகக் குழுவில், நீதிக்கட்சி பதவி ஏற்காது என்றும், நேசநாடுகளின் போருக்கு ஆதரவு தரும் என்றும் முடிவுகளை மேற்கொண்டார். வலிய வந்த பதவி நாற்காலியைத் தலைவர் இப்படி எளிமையாக உதறிவிட்டாரே என்று சில பதவியாசைத் தோழர்கள் மனத்திற்குள் பொருமினர். தமது முடிவை 29-ஆம் நாள் பெரியார் அறிவித்து விட்டார். நாற்பதாண்டு கட்கு முன்னரே தம்மை நாடி வந்த சென்னை மாகாணப் பிரதமர் பதவியை ஒதுக்கிய பெரியாரின் மாண்பு என்னே! வெள்ளுடை வேந்தரை நினைவுறுத்தும் இச்செயலில், அதனிலும் மேலான முற்போக்கு ஒன்றும் உள்ளது. அன்னார் தமக்குத்தான் பதவி வேண்டாமென்றார்; தியாகராயரைப் போன்றே நீதிக்கட்சித் தலைவரான பெரியாரோ, தமது கட்சியே பதவி ஏற்காதெனத் திட்டமாகக் கூறிவிட்டார்! பெரியாரைப் பற்றிச் சரியாகப் புரியாத கவர்னரோ, பன்னீர் செல்வத்திடம், உங்கள் தலைவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியமா? அடுத்து முதல் மந்திரி அவர்தான் - என்றாராம். செல்வமோ, எங்கள் தலைவர் உங்கள் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே என்று, அவரது வாயை அடைத்தாராம்.

நவம்பர் இரண்டாம் நாள் பண்டித முத்துசாமியாரும், ஈ.வெ. கிருஷ்ணசாமியாரும் விடுதலை பெற்று வெளிவந்தனர். பெரியாரே சிறை வாசலில் சென்று அன்னாரிருவரையும் வரவேற்றுச் சிறப்பித்தனர். ஈ. வெ. கிருஷ்ணசாமியோ முன்னிலும் தீவிரத்துடன், ஈரோட்டில் ஆரிய திராவிட ஆராய்ச்சிப் பள்ளி ஒன்று துவக்கிப் பணிபுரியலானார். ஈரோட்டில் திராவிட நடிகர் கழகம் ஒன்றைப் பெரியார் 1939 நவம்பர் 24 ஆம் நாள் துவக்கி வைத்தார்.

வடவர் ஆதிக்கம் அடியோடு தகர்க்கப்பட்டுத் தமிழர் சுய ஆட்சி உரிமை பெறவேண்டும் என்ற அடிப்படையில் பெரியார் திராவிட