பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆவதற்கான நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரத்தைப் பெரியாருக்கு வழங்கியது. அடுத்த வாரத்தில் நெல்லையில் நடந்த தமிழர் மாநாட்டின் தலைமை ஏற்றபோது, பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகட்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானத்தைப் பெரியார் நிறைவேற்றினார். அண்ணாவுடன் இங்கு, சி.பி. சின்னராஜ், பி. சண்முக வேலாயுதம் கலந்து கொண்டனர். சென்னை திரும்பியதும் அடுத்த திங்களில் அதாவது ஜூலை 30-ஆம் நாளில் சென்னை வந்திருந்த வைசிராய் வெல்லிங்டனை, அவர் விரும்பிய வண்ணம் சென்று சந்தித்துப் பேசினார் பெரியார்.

சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு என அழைக்கப்பட்ட வேலூர் சின்னராஜ் சுயமரியாதை இயக்க முன்னணி வீரர். அனல் பறக்கப் பேச எழுத நடிக்க வல்லவர். அண்ணாவின் அன்புத் துணைவராய் விளங்கியவர், “தீப்பொறி” ஏடும், போர் வாள் நாடகமும் கணக்கற்ற நூல்களும் நகைச்சுவை மிளிரும் பேச்சும் தனித்தன்மை பெற்றவை. 1978-ல் மறைந்தார். தமிழ் நாடு சட்ட மன்ற மேலவைத் தலைவராகக் கலைஞர் ஆட்சியில் வீற்றிருந்தவர்.

ஈரோடு சண்முகவேலாயுதம் “ஈரோடு வாசி”, “ஈரோட்டுப் பாதை” ஆசிரியர். எந்நாளும் பெரியாரின் அந்தரங்கத் தொண்டர். நல்ல பேச்சாளர். பெரியாரின் அசைவுக்கும் அர்த்தம் சொல்லும் வித்தகர்.

1940 மே 5-ஆம் நாள், சென்னையில், இந்தி எதிர்ப்புத் தியாகிகளான தாளமுத்து நடராசன் கல்லறைக்குப் பெரியார் அடிக்கல் நாட்டினார். 1939 அக்டோபரில் அரசு பதவி நீங்கியும், தமது சம்பளத்தை மட்டும் பெற்று வந்தனர், சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர்கள். இதைக் கண்டித்துச் சம்பள ஒழிப்புநாள் கொண்டாடினார் பெரியார், மே 15-ஆம் நாள்!

வரலாற்றுப் புகழ் தாங்கிய திருவாரூர் மாநாடு 1940 ஆகஸ்டுத் திங்கள் 24, 25 ஆகிய இரு நாட்களிலும் சிறப்புற நடைபெற்றது. 15-வது நீதிக்கட்சி மாகாண மாநாடு இது. பெரியார் தலைமையில், இளவரசர் முத்தையா திறந்து வைக்க, புச்சிரெட்டிப்பாலம் ராமச்சந்திர ரெட்டியார் கொடி உயர்த்த, செல்வம் நகரில், ஜின்னா மண்டபத்தில் கோலாகலமாகக் கூடியது. திராவிடநாடு திராவிடருக்கே என்ற முழக்கம் கட்சியின் தீர்மானமாக மாநாட்டில் இயற்றப்பட்டது மிக முக்கியமானதாகும். கி.ஆ.பெ. விசுவநாதம் காரியதரிசியாகவும், சி.என். அண்ணாதுரை கூட்டுக் காரியதரிசியாகவும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.