பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



1949-ல் ஏற்காட்டிலிருந்து பெரியாரின் பிரதிநிதியாகச் சென்னை “விடுதலை” அலுவலம் வந்தவர், அண்ணாவுடன் சேர்ந்து, கண்ணீர்த்துளியாகிவிட்டார். ஈரோடு வந்தவுடன், பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு, நேரே குன்னூர் நகராட்சி ஆணையாளராயிருந்த தன் தந்தை செந்தில் வேலாயுத நாடார் அவர்களிடம் போய்ச் சேர்ந்தார். ஆயினும் அய்யாவின் மெய்யன்பர். பெரியாரிடம் ‘நீ’ என்று பேசத் துணிவுள்ள ஒரே மனிதர்.

கும்பகோணம் மாநாடு பெரியாரின் வாழ்த்துச் செய்தி க.அன்பழகனால் படிக்கப்பட்ட அளவோடு முடிந்தது மாணவ உலகுக்குப் பெருத்த ஏமாற்றம். அதனால் மார்ச் 15-ஆம் நாள் செல்வம் நினைவு நாள் பொதுக்கூட்டத்திலும்; பின்னர் பெருமுயற்சியால், ஏப்ரல் முதல் நாள், குடந்தை அரசினர் கல்லூரியிலும் பெரியார் கலந்து கொண்டு, அரியவுரை நிகழ்த்துமாறு செய்து, மாணாக்கர் பெருமிதமும் பூரிப்பும் எய்தினர். கும்பகோணத்திலிருந்து ஈரோடு சென்றதும் பெரியார் புதுத்தென்பு கொண்டார். தம்மிடம் அப்போது தனிச் செயலராக இருந்த கஜேந்திரனை அழைத்தார். கல்லூரிகளுக்கெல்லாம் அனுப்பினார். எங்கெங்கு இயக்கப்பற்றுள்ள மாணவர்கள் உள்ளார் எனக் கண்டறிந்தார். அனைவரையும் ஈரோடு வருமாறு அன்பழைப்பு விடுத்தார். அதிலே பெரு வெற்றியும் பெற்றார்.

வடார்க்காடு திருப்பத்தூர் வழக்கறிஞர் சாமி நாயுடு நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர். அவருடைய முத்தமகன் கஜேந்திரன். மகள் சுலோசனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின்னர் பெரியாரிடம் அந்தரங்கச் செயலாளராக வந்து சேர்ந்தார். பின்னர் “குடி அரசு”, “ஜஸ்டிசைட்” இதழ்களில் எழுதினார். 1945 மே 24-ஆம் நாள் பெரியார் தலைமையில் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா பி.ஏ. அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கஜேந்திரன் அரச தலைமைச் செயலகத்தில் அலுவலரானார். மிராண்டா அம்மையார் சென்னை மாநகராட்சிக் கல்வித்துறை அதிகாரியானார். இவர்கட்கு இரு பெண் மக்கள்,

ஈரோட்டில் 1944 ஏப்ரல் 17-ஆம் நாள் நடைபெற்ற திராவிட இளைஞர் மாநாட்டையொட்டி எல்லா மாணவர்களையும் பெரியார் நேரில் பார்த்துக்கொள்ள விரும்பினார். அண்ணா தலைமையில், நெடுஞ்செழியன் திறந்துவைக்க, அன்பழகன் கொடி ஏற்ற, இம்மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பழைய கோட்டை இளைய பட்டக்காரர் என். அர்ச்சுனன் வரவேற்புக் கழகத் தலைவர். எஸ். ஆர். சந்தானம் செயலாளர். இதனை ஒட்டியே மாணவர் பிரச்சாரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரியாருக்குத் திடீரென்று உடல் நலம்குன்றி, நடக்க