பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

180


முடியாமல் அவதிப்பட்டார். எனினும் புதிய வரவுகளான மாணவர்களை ஆவலுடன் கண்டு உரையாடிக் களித்தார். இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற கம்பர் மாநாடு கலவரத்தில் குழப்பமாகி, நடைபெறாமல் நின்று விட்டது. இது சுயமரியாதைப் பிடாரிகளின் அடாத செயலென்று தமிழ்நாட்டின் அக்கிரகாரப் பத்திரிகை உலகம் அவதூறு பொழிந்தது.

கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மிகப்பெரும் பண்ணைக்காரராகிய பட்டக்காரர் குடும்பத்திலிருந்து கழகத்துக்குக் கிடைத்த நன்முத்து என். அர்ச்சுனன், 20 வயதில் ஈடுபட்டு 23 வயதில் வாழ்வையே முடித்துக்கொண்டார். இந்த மூன்றாண்டுகளில் முப்பதாண்டுப் பொதுப்பணியை அற்புதமாய்ச் செய்து காட்டினார். இந்தக் காலகட்டத்தில் ஏராளமான மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்தியும், பங்கேற்றும் சிறப்பித்தார்.

எஸ்.ஆர். சந்தானம் மாப்பிள்ளை நாயக்கரின் முதல் மகன். நெடுநாள் ஈரோடு நகரமன்ற உறுப்பினர். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தூண்களில் முக்கியமானவர். பெரியார் நினைத்தவண்ணம் முடித்திடும் ஆற்றலுடையார்.

மாணவர் பயிற்சி பெற்று மாவட்டந்தோறும் இயக்கப் பிரச்சாரம் செய்திடப் புறப்பட்டனர். அந்தக் கோடை விடுமுறையில் தொடங்கிய இவ்வழக்கம், திராவிடர் கழகத்தால் இன்றளவும் கையாளப்படுமாறு, பெரியார் பணித்துவிட்டார். பிரிட்டிஷ் அரசு சிறையிலிருந்த காந்தியாரை விடுதலை செய்துவிட்டு, வெள்ளையனே வெளியேறு என்று 1942 ஆகஸ்டில் செய்த தீர்மானத்தைத் திரும்பப் பெறுமாறு கேட்டது. காந்தியார் விடுதலையால் யாருக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது? இறந்துபோன தம் மனைவியார் பெயரால் கஸ்தூர்பா நிதிவசூலித்து, அடுத்துவரும் பொதுத்தேர்தலில் நிறையச் செலவு செய்ய முனைந்துவிட்டார்களே! என்றார் பெரியார். மே மாத இறுதியில் சென்னை மாநில 3-வது மருத்துவகுல மாநாட்டைச் சென்னையில் திறந்துவைத்துவிட்டுப் பெரியார், ஜூன் முதல்வாரம் ஆந்திரப் பகுதியில் சுற்றுப்பயணம் சென்று வந்தார். பாக்கிஸ்தான் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்த காந்தியார், இறுதியில் ஜின்னாவைச் சந்திக்க இசைந்ததைக், காந்தியாரின் சரணாகதி எனப் பெரியார் வர்ணித்தார். அவர்கள் பேச்சு முறிந்ததையும் விமர்சித்தார்.

நீதிக்கட்சியின் 16-ஆவது மாகாண மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. பழைமைவாதிகள் சிலர் திட்டமிட்டுப் பெரியாரின் தலைமைப் பதவியைப் பறித்திடக் கனவு கண்டனர். பெரியாரின் தீவிரப் போக்குக் கண்டு மனங்குமுறும் பதவிப்பித்தர்கள் அவர்கள். ஆனாலும் தமிழகத்தின் எல்லாப்