பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பகுதிகளிலிருந்தும் - குறிப்பாகத் தஞ்சை திருச்சி மாவட்டங்களினின்றும் சென்றிருந்த பல்லாயிரக்கணக்கான பெரியார் தொண்டர்களின் முயற்சியால் எதிர்ப்பு தலைகாட்டவே முடியவில்லை. ஏற்கனவே சென்னையில் அண்ணா தலைமையில் கூடிய ஒரு மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற பெயரைத் திராவிடர் கழகம் என மாற்ற வேண்டிப் பரிந்துரைக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி சேலத்தில் கட்சியின் பெயர் திராவிடர் கழகம் என மாற்றப்பட்டது. சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாதுரை தீர்மானந்தான். பெரியாரின் விருப்பத்திற்கிணங்கவே அண்ணா இதனைக் கொணர்ந்து நிறைவேற்றினார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட கவுரவப் பட்டங்களான சர், திவான்பகதூர், ராவ்பகதூர், ராவ்சாகிப், கான்பகதூர், கான்சாகிப் போன்றவைகளைக் கட்சியில் உள்ளோர் விட்டுவிடவேண்டும். அதேபோலக் கவுரவ நீதிபதி, ஜில்லாபோர்டு, தாலுகாபோர்டு நியமனங்கள், நாமினேஷன், மூலமாகப் பிரிட்டிஷ் அரசால் தரப்பட்ட எல்லாப் பதவிகளையும் விட்டொழிக்க வேண்டும் என்பது. சரிகைக் குல்லாய்க் கட்சி என்ற அவப்பெயர் இத்தீர்மானம் நிறைவேறியதன் வாயிலாக ஒழிந்தது; 1944 ஆகஸ்ட் 27-ஆம் நாளோடு! இங்கு ஒரு தீர்மானத்தின்மீது பேசினார் கடலூர் சிறுவன் வீரமணி.

கடலூர் சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்களின் பிள்ளைகளை திராவிட இயக்கத்துக்காகவே அவர் பெற்று வளர்த்து ஆளாக்கி விட்டவர். மூத்தவர் கி. கோவிந்தராசன் தி.மு.க. செயலாளர். அடுத்தவர் கி. தண்டபாணி தி.மு.க. சார்பில் நகர்மன்ற உறுப்பினர். மூன்றாவது பிள்ளை பால்யத்திலேயே படுசுட்டியாக இருந்தது.

கடலூர் ஓ.டி., எனப்படும் பழைய பட்டினத்தில் சென்னையைச் சேர்ந்த ஏ. சுப்ரமணியம் பி.ஏ. அலுவல் பார்த்து வந்தார். பெரியாரிடத்தில் ஏகலைவ பக்தி கொண்ட அவர் தமது பெயரை ஆ. திராவிடமணி என மாற்றிக்கொண்டு, தமிழ் வெறியும் சுயமரியாதைக் கொள்கை வெறியும் கொண்டவரானார். அவரது அத்யந்த சீடர் 10 வயது கி. வீரமணி; இவர் 2-12-1933-ல் பிறந்தார். கடலூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முதன்மை மாணாக்கராக இருந்து முடித்தார். இடையில் சுயமரியாதை உணர்வினை மூச்சோடும் நீரோடும் உணவோடும் உயிர்த்தும் உண்டும் தன் உடலை ஊணை அறிவை வளர்த்து வந்தார். வாயாடித்தன்மை பகுத்தறிவு ஒளி வீச்சாக இருந்தது. 10 வயதில் சராசரி உயரத்தைவிடக் குள்ளமாதலால் மேஜைமீது தூக்கி நிறுத்திப் பேசச் சொல்லிவிட்டால் போதும். நிறுத்துவதுதான் கஷ்டம். இந்தப் பத்துவயதுச் சிறுவன் வீரமணி 1944