பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

184


அதுதான் நமது போராட்டம் - என விளக்கினார். சாதி என்றால் Caste என்றும், வகுப்பு என்றால் Class என்றும் பெரியார் வேறுபாட்டைத் தெரிவித்தார்.

கலையுலகில் மறுமலர்ச்சித் தூதுவராக விளங்கிய என்.எஸ். கிருஷ்ணன் சென்னையில் ஒரு நாடக சபா துவக்கினார். அவரது இழந்த காதல் நாடகத்துக்குப் பெரியார், நவம்பர் முதல் நாளிரவு தலைமை ஏற்றுப் பாராட்டினார். கலையுலகில் அவர் மீதும், எம்.கே. தியாகராச பாகவதர் மீதும் அவதூறுகளைக் கிளப்பி விட்டிருந்தனர் அழுக்காறு படைத்தோர் சிலர். பெரியாரின் ஒத்த வயதினரும் மதிப்புக்குரிய நண்பருமான செ.தெ. நாயகம் 1944 டிசம்பர் 13-ஆம் நாள் மறைந்தது குறித்துப் பெரியார் மிகுந்த வருத்தமுற்றார்.

டிசம்பர் 24-ஆம் நாள் அண்ணாவுடன் புறப்பட்டுப் பெரியார் கல்கத்தா சென்று, அங்கு எம்.என். ராயின் தீவிர ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 27-ஆம் தேதி உரையாற்றினார். தனது நாத்திக ஆசான் பெரியார் என்றும், அவரளவு நாத்திகத்தைப் பற்றிப் பேசி, எழுதி, நூல் வெளியிட்டவர் உலகில் வேறு எவரும் இலர் என்றும், ராய் புகழ்ந்துரைத்தார். அப்படியே கான்பூர் சென்று, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்று, 29, 30, 31 மூன்று நாட்களும் ஆங்கிலத்தில் விளக்கமாக உரை நிகழ்த்தினார் பெரியார்.

சேலம் மாநாட்டிற்குப் பிறகு திராவிடர் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தினார் பெரியார். 1945-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 24,302. அவர்கள் செலுத்திய கட்டணம் ரூ.2619-13-0. மாணவர்கள் புத்தெழுச்சியால் மனம் நெகிழ்ந்த பெரியார் எதிர்காலத்தில் இனி அச்சமில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தி, ஆரிய திராவிடப் போருக்கு அறைகூவல் என்ற “குடி அரசு" 20-1-45 தேதி இதழில் தலையங்கமே தீட்டினார். தென்னார்க்காடு மாவட்டம் புதுப்பேட்டையில் திராவிட மாணவர் மாநாடு; சிற்றூரிலும் வெற்றிகரமாய் நடக்கும் என எடுத்துக் காட்டாய் இலங்கியது. பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா என்று தொடங்கி, இங்கு உன் நாட்டுக்கு இழி கழுதை ஆட்சியா? என்றெல்லாம் ஓடும் கவிதைப் பிரவாகம், புரட்சிக் கவிஞர் இந்த மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். ஈ.வெ.கி. சம்பத் இம்மாநாட்டின் தலைவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர் மீடியட் படிப்போடு நிறுத்திய சம்பத், எல்லா வகையிலும் பெரியாரின் வாரிசாக விளங்குத் தகுதி பெற்றிருந்தார். பெரியாரும் தத்து எடுத்துக் கொள்ளப் பத்திரங்கள்கூட வாங்கி வைத்திருந்தார். என்ன அவநம்பிக்கை ஏற்பட்டதோ - பின்னாளில் பெரியாரின்