பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கண்டித்துக் “குடி அரசு” 17-9-1944 இதழில் எழுதினார். அதே போன்று டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்துபோது, அவருக்கு நீதிக்கட்சியின் சார்பில் என்று சொல்லி, இவர்கள் செப்டம்பர் 22-ஆம் நாள் விருந்தொன்று கொடுத்தனர். உண்மை நிலவரம் உணர்ந்த அம்பேத்கர், இவர்களைக் கண்டித்து உரையாற்றினார். அடுத்த நாளே பெரியார் இல்லத்துக்குத் தாமே வருகை தந்து. நீண்ட நேரம் உரையாடியும் சென்றார். இம்மாதம் 29-ஆம் நாள் திருச்சியில் பெரியார் இடத்துக்கு வந்து, அனைத்திந்திய இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் மூஞ்சே, பெரியாரைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு இந்து மகா சபைத் தலைவர் டாக்டர் வரதராசலு நாயுடுவும் வந்திருந்தார். இந்து என்ற சொல்லுக்கே ஆதாரம் இல்லை என வாதாடினார் பெரியார். அனைத்திந்திய திராவிடர் கழகம் அமைத்திட, மூஞ்சே பெரியாரிடம் கேட்டார்.

தஞ்சையில் புரட்சிக் கவிஞர் தலைமையில் நடந்த திராவிட மாணவர் மாநாட்டை 26-ஆம் நாள் பெரியார் திறந்து வைத்தார். கரூரில் 24-ஆம் நாளும், கோவையில் அக்டோபர் முதல் நாளும் நடைபெற்ற கழக மாநாடுகளில் கலந்து கொண்டார். கோவை மாநாட்டில் சென்னை சத்தியவாணிமுத்து பங்கேற்றார்.

சென்னையில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் தோன்றிய சத்தியவாணி, அவர் கணவர் எம்.எஸ். முத்து இருவரும் சிறந்த சமுதாய சீர்திருத்தத் தொண்டர்கள். பெரியார் வழி நின்று சத்தியவாணி சிறந்த பேச்சாளராக விளங்கினார். அண்ணாவுடன் தி.மு.க. அமைப்பில் இருந்து வந்தார். அண்ணா , கலைஞர் அமைச்சரவைகளில் இடம் பெற்றார். அ.இ.அ.தி.மு.க. சார்பில் டெல்லி மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து, சமூக நலத்துறை அமைச்சராகியுள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற வர்ணாசிரம மறுப்புக் கூட்டத்தில் பெரியார் அக்டோபர் 14-ஆம் நாள் பங்கேற்றார். புராணங்கள் கற்பனையானாலும், சைவரும் வைணவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் காப்பி அடித்துள்ள வேடிக்கையைப் பெரியார் நன்கு பிரித்துக் காட்டினார். பக்தலீலாமிருதம் வைணவ ஆழ்வார்கள் 82 பேரைப் பற்றி உரைக்கிறது. பெரிய புராணம் 63 சைவ நாயன்மார்களைப் பற்றிப் பேசுகிற, நாயன்மார் நால்வர். ஆழ்வாராதியர் பன்னிருவர். மேலும் பொதுவுடைமைவாதிகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியாவில்தான் சாதியும் வகுப்பும் தனித்தனியே இருக்கின்றன. மேல் நாடுகளில் வகுப்பு பேதம்தான் இருக்கிறது; அதனால் அதை ஒழித்தல் சுலபம். இங்கே முதலில் சாதியை ஒழித்தால்தான் வகுப்பை நீக்க முடியும். சாதியை ஒழிப்பதுதான் சிரமம். அதில் அவர்கள் நுழைய மாட்டார்கள்;