பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



மார்ச் 18-ஆம் நாள் திருச்சியில் தென்பகுதி ரயில்வே அலுவலர் சங்கத்தார் பெரியாருக்கு 1080 ரூபாய் நிதி வழங்கினார்கள். அவர்கள் குறை போகப் பெரியார் காட்டிய வழிகள், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவையாகும். அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் ரயில்வே சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் அய்ந்து பேரில் ஒருவர் முஸ்லிம்; அவரும் பார்ப்பன மாதை (கே. சந்தானம் அய்யங்காரின் மைத்துனியை) மணந்தவர்; மற்றவர் பார்ப்பனர். நீதி எப்படி நம்மவர்க்குக் கிடைக்கும்? காங்கிரசின் ராமராஜ்யம் நமது சூத்திரர்களுக்கு மட்டுமே தீங்கிழைக்கிறது. முஸ்லீமோ, வெள்ளையரோ, சட்டைக்காரரோ, மதம் மாறுவதாய் மிரட்டும் அம்பேத்காரின் தாழ்த்தப்பட்டவரோ தமக்குரிய கோட்டாவைப் பெறுகிறார்கள். இந்து என்கிற பெயரில் பார்ப்பனர் முழுக் கோட்டாவும் அடித்து விடுகின்றனர். தப்பித்தவறி நம்மவர் யாராவது மேலே வந்தால், கெட்ட பெயர் உண்டாக்கி, ஆளையே அழித்து விடுகிறார்கள். அதனால்தான் நாம் இந்து என்னும் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும். நமக்கு அய்ந்தாண்டுகளுக்குப் பின் தாம் இந்துவல்ல என்று சொன்ன அம்பேத்காருக்குச் சலுகை கிடைக்கிறது; நாம் திராவிட நாடு கேட்ட மூன்றாண்டுகட்கு அப்பால் பாக்கிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்குப் பயப்படுகிறார்கள்; நம்மை மாத்திரம் மதிப்பதில்லை . ஆகையால் நமக்கு இருக்கிற இழிவு ஒழிய நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விடுவதுதான் ஒரேவழி - என்றார் பெரியார்.

பெரியாருக்கு இப்போது மகிழ்ச்சியளித்த ஒரே செய்தி என்.எஸ். கிருஷ்ணன், தியாகராச பாகவதர் இருவரும் 25-4-47-ல் விடுதலை ஆனதுதான்! அதனால் நோயுற்றிருந்த அவர் பூரித்தெழுந்தார். எடை ஒரு வேளை அதிகரித்ததோ என்னவோ? திருவத்திபுரத்தின் கழகத் தோழர்கள், அடுத்த திங்கள், பெரியாருக்குத் துலா நிறை புகு விழா நடத்திக் களித்தனர்.

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் வெள்ளையன் வெளியேறினான். காந்தியார் கேட்ட இந்துஸ்தான் சுயராஜ்யம் முழு அளவில் கிடைக்கவில்லை. இந்தியாவைக் கூறுபோட்டுப், பாக்கிஸ்தானைத் - தனியாக்கிக், குடியேற்ற நாட்டு அந்தஸ்துடன்தான் சுயராஜ்யம் தந்தான். ஆடி, ஆனந்தப் பள்ளுப் பாடினர் காங்கிரசார். “இது நமக்குத் துக்க நாள் வெள்ளையன் வெளியேறினானாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது சவாரி செய்கிறானே?” என்றார் பெரியார். திராவிடர் கழகத் தேனிசையில் அபசுரம் ஒலித்தது. அண்ணா எழுதினார் “இரண்டுபேர் நம் மீது சவாரி செய்தனர்; ஒருவன் ஒழிந்ததில் பாதிச்சுமை குறைந்ததல்லவா? அதனால் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிக்குரிய நாள்!” என்று. வெளியில் தெரியுமளவுக்குக், கழகம் இரு முகாமாகித், தாக்கிக் கொண்டது. ஏற்கனவே, எல்லாரும்