பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

192


பதவியில் அமர்ந்து, அரசியல் சட்டங்களை இயற்றத் தொடங்கினர், முஸ்லிம் லீகும், டாக்டர் அம்பேத்கர் இயக்கமும் நேரடி நடவடிக்கையில் இறங்கின. சர் ஸ்டா போர்டு கிரிப்சும், வைசிராய் வேவலும் திராவிடர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தும், காலை வாரிவிட்டனர். பெரியாருக்கு அதிர்ச்சி தரும் வண்ணம், 24 வயது நிரம்பு முன்னர் என். அர்ச்சுனன் மறைந்துவிட்டார் 12-10-46 அன்று.

காங்கிரஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் திட்டவட்டமான கொள்கையில்லாமல் குழம்பிக் கிடந்தனர் மந்திரிகள். மதுவிலக்கில் கட்டுப்பாடில்லாக் காங்கிரஸ் மந்திரிகள் என்று பெரியார் கண்டனம் தெரிவித்து எழுதினார். மேலும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தலைப்பிலும் எழுதினார். அதாவது, காங்கிரஸ் இடைக்கால சர்க்கார் அமைத்ததைச் சுட்டிக்காட்டி! முன்பு நீதிக்கட்சி ஆட்சி முடிவுற்றுக், காங்கிரஸ், ஆட்சி அமைக்கத் தயங்கியபோது, 1936-ல், அற்பாயுள் மந்திரிசபையென இடைக்கால மந்திரி சபையைச். காங்கிரசார் வர்ணித்தார்களல்லவா - அதைப் பெரியார் நினைவூட்டினார்.

சென்னையில் டிப்புசுல்தான் நாள் என்பதாக. 1946 நவம்பர் 16-ஆம் நாள் கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது புதுமையாகத் தோன்றுகிறது.

சென்னை மாகாணத்தில் பிரகாசம் தலைமையில் காங்கிரஸ் அரசோச்சத் தொடங்கியிருந்தது.

ஈரோட்டில் சண்முக வேலாயுதம், புலியூர் குகநாதன் இருவரும் சேர்ந்து நாதன் கம்பெனி என்ற புத்தக விற்பனை நிலையம் துவங்கினர். “குடி அரசு” இதழ் சில காலம் இவர்கள் பொறுப்பில் நடைபெறப் பெரியார் அனுமதித்திருந்தார். பெரியாரின் சேலம் கல்லூரிச் சொற்பொழிவைத் தொகுத்து “தத்துவ விளக்கம்” என்ற அழகிய நூலையும் இவர்கள் வெளியிட்டனர். பின்பு 1947 சனவரி 22 அன்று துவக்க விழா ஆற்றிய பெரியார், நூல்களைப் பற்றி அரிய கருத்துகளை அங்கு வெளியிட்டார்:- இப்போது நூல் படிப்பவர் தொகை அதிகமாகியிருப்பதால், வெளியீட்டாளர் நூல் விற்குமோ என அஞ்சவேண்டியதில்லை. ஆனால் படித்த கூட்டத்தார், பிறருக்கு உபகாரிகளாக இருப்பதில்லை. பண்டிதர்கள் எவ்வளவோ பெரிய நூல்களை எழுதி வெளியிட்டாலும் மூடநம்பிக்கையில்லாத, மானமற்ற தன்மையில்லாத, நூல் ஒன்றேனும் காண முடிவதில்லை. அறிவியக்க நூல்களை வாங்குவோர் மிக அவசியமானவற்றை வைத்துக் கொண்டு மற்ற நூல்களைக் குறைந்த விலைக்கு, உடனே, பிறர்க்கு விற்று, நிறையப் பேர் படிக்க வழி செய்ய வேண்டும் - என்றெல்லாம் பெரியார் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினார்.