பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஜூன் திங்கள் நடைபெற்ற இரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தம், சென்னையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இவற்றை வரவேற்றும், வெற்றிபெற வாழ்த்தியும், பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் - பத்திரிகையாளர் இழி தன்மைக்கும் பலியாகாமல் எச்சரிக்கையாய் நடந்துவர வேண்டுமென்றும் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறினார் பெரியார்.

கழகத்துக்கு நிதி வசதியே இல்லாததால் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து உதவ வேண்டும் என்றும், அது சேரும் வரையில் கழகத் தோழர்கள் ஆங்காங்கு மாநாடு கூட்டி நிறையப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம் என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.

சூலைத் திங்கள் 31-ஆம் நாள் முதல் ஆகஸ்டுத் திங்கள் 8-ஆம் நாள் முடியப் பெரியார் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இதில் புதுமையாக விளம்பரம் ஒன்று செய்யப்பட்டது திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் என்னும் சிறந்த அமைப்புத் தொண்டரால். அதாவது, பெரியாருடன் நெடுஞ்செழியனும் வருவார்; ஒலி பெருக்கி அமைக்கப்பட்ட காரில் இருவரும் பயணம் செய்வார்கள் என்பதாக! 1946-ல் இதுவும் ஒரு புதுமை!

பெரியார் குடும்பத்தில் இந்த ஆண்டு இரு திருமணங்கள் நடந்தன. அண்ணாரின் சிறிய மகள் செல்லா என்கிற நாகலட்சுமிக்கும், சேலம் தாதம்பட்டி ராஜுவுக்கும் 19-4-46-ல் திருமணம் நடைபெற்றது. ஈ.வெ.கி. சம்பத் - திருப்பத்தூர் சாமி நாயுடு மகள் சுலோச்சனா இவர்கள் திருமணம் 15-9-1946 அன்று திருப்பத்தூரில் நடைபெற்றபோது பெரியார், பெண்கள் அலங்கார பொம்மைகளா - என்ற தலைப்பில், பெண்டிருக்கு உள்ள நகைப் பைத்தியம் முதலிய பழைமைக் கருத்துகளைச் சாடினார். (பெரியார் வலதுகை மோதிர விரலில் எப்போதும் அணிந்திருக்கும் பெரிய பச்சைக்கல் மோதிரத்தைக் குறும்புடன் பார்த்தனர் மணமகளார்!)

திராவிட மக்களுக்குத் தனியான நெறியில்லை ; ஆரிய மதம் ஆரிய வேதம் ஆரியக் கலை இவைகளையே தமது நெறியாகத் திராவிடர் தவறாகக் கருதுகின்றனர்; ஆதாரமேயில்லாத பரதக் கண்டம் அல்லது பாரத தேசம் தமது நாடு என நினைக்கின்றனர்; யார் நம்மவர், யார் அந்நியர் என்பதும் புரியவில்லை ; திராவிடர் தவிர மற்ற எல்லாருமே நமக்கு அந்நியரே; காங்கிரஸ் ஏற்பட்டது. முஸ்லீம்களிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்கவே; எனவே ஆரியம் ஒழிந்த திராவிடமே நமது இலட்சியம் - என்று பெரியார் சென்னையிலும் பிற ஊர்களிலும் நடந்த பொதுக் கூட்டங்களில் விளக்கினார். இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத்தேர்தலில், காங்கிரஸ் போட்டியிட்டு, நூறு சதவீத வெற்றியைத் தேடிக் கொண்டது! வெள்ளையர் வெளியேறுமுன்பே காங்கிரசார் இங்கு