பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

196


அழிக்க நினைத்தால் அது என் இயக்க அழிவல்ல; பிராமண அழிவேயாகும் - என்று 27-3-48 “குடி அரசு” இதழில் எழுதி இடித்துரைத்தார். இனிப் பிராமணாள் என வழங்காமல், இலக்கிய ஆதாரத்தின்படிப், பார்ப்பான் என்றே அழைத்திட ஆணையிட்டார். திராவிடர் கழகம், என்றும் பலாத்காரத்தையோ வன் செயல்களையோ ஆதரிக்காது; ஊரெங்கும் தாக்கப்பட்டும், அடிக்கப்பட்டும் அவதிக்கு ஆளாவதெல்லாம் கழகத்துக்காரரே! வன்செயலை விரும்பாத அகிம்சாவாதியான காந்தியடிகளையே இந்து மத வெறிப் பார்ப்பனன் சுட்டுக் கொன்றது போல, அறவழியில் செல்லும் கழகத்துடன் மோத வேண்டாம் - என எச்சரித்தார் பெரியார். சுயநலமிகளுக்கு மட்டுந்தான் எங்கள் கழகம் விரோதி. மற்ற அனைவர்க்கும் தோழன் - எனவும் விவரித்தார். ஜாதி மதமற்ற - வர்ணாசிரம அடிப்படை ஒழிந்த - சமுதாயம் அமைத்திட இனியாவது பாடுபட்டு ஆவன செய்யுங்கள் என அரசியல் நிர்ணய சபைக்கும், காங்கிரசுக்கும் 1948 ஏப்ரல் 24 -ஆம் நாள் பெரியார் ஆலோசனை வழங்கினார்.

17-4-48-ல் சென்னையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பாளர் மாநாடு ஒன்றில் பெரியார் கலந்து கொண்டார். அண்ணாவும், திராவிடர் கழகத்தவர் அல்லாத திரு.வி.க., அருணகிரி அடிகள், ம.பொ. சிவஞானம், டி. செங்கல்வராயன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரும் கட்டாய இந்தியை எதிர்த்துப் பேசினர்.

பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது அபிப்பிராய பேதம் உண்டா? என வெளிப்படையாகவும், நேரிடையாகவும் தம்மிடம் வினவிய கழகத் தோழர்களிடம் பெரியார் - இம்மாதிரிக் கேட்பதே தவறு. ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்க முடியும். மற்றவர், பின்பற்றுவோராகத்தான் இருக்க வேண்டும். அபிப்பிராய பேதம் சொந்தத் தனிப்பட்ட விஷயங்களில் வேண்டுமானால் இருக்கலாம்; கழக விஷயங்களில் இருக்கக்கூடாது! அப்படி ஏதாவது இருப்பதாக வெளிப்படுத்தினால், அது குறுக்கு வழியில் தமக்கு விளம்பரம் தேடும் முறையாகவே கருதப்படும்... என்று திட்ட வட்டமாகவே அறிவித்து விட்டார். இந்நிலையில் “திராவிட நாடு” இதழில் அண்ணா எழுதிவந்த - லேபில் வேண்டாம், உள்ளம் உடையுமுன், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற உருவகக் கதைகள், ஏதோ புயலுக்கு முன்னெச்சரிக்கை போலக் காட்சி தந்தன. அநேகர் எதிர்பார்த்தவாறு அறிஞர் அண்ணா தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை!

அனைத்துலகத் தொழிலாளர் நாளாகிய மே தினத்தைத், தொழிலாளர்களின் உண்மையான இயக்கமாகிய திராவிடர் கழகம் ஏன் கொண்டாடுகிறது என்பதை விளக்கினார் பெரியார். 1-5-48 “குடி அரசு” இதழில் மே தினமும், திராவிடர் கழகமும் என்று தலையங்கம் தீட்டினார். மே திங்கள் 8, 9 நாட்களில் தூத்துக்குடியில் 18-வது