பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

197

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திராவிடர் கழக மாகாண மாநாடு நடைபெற்றது. பெரியார் தலைமையேற்று, காந்தியடிகள் படத்தையும் திறந்து வைத்தார்; தி.பொ. வேதாசலம் திறப்பாளர்; கே.கே. நீலமேகம் கருப்பு சிவப்புக் கொடியினை உயர்த்தினார். திராவிடநாடு படத்தை அண்ணா திறக்க வேண்டும்; வரலில்லை! பன்னீர் செல்வம் படத்தை அழகிரியும், தாளமுத்து நடராசன் படத்தை ஏ.பி. சனார்த்தனமும், வ.உ.சி. படத்தைத் திரு.வி.க.வும் திறந்து வைத்தனர். கழகத்தில் கட்டுப்பாடு காக்கப்படவேண்டிய அவசியம் பற்றிப் பெரியார் வலியுறுத்தினார். அண்ணா வராததை எம்.ஆர். ராதா கண்டித்துப் பேசவே, “நடிகவேள் மாநாட்டில் நஞ்சு கலந்தார்” என்றார் மு. கருணாநிதி.

வாழ்வில் ஒன்று சேராத உறவினர்கள்கூடத் தாழ்வில் ஒருங்கிணைவார்களல்லவா? ஓமந்தூரார் ஆட்சி கட்டாய இந்தியை மீண்டும் கொணர்ந்து தலைவரையும் தளபதியையும் இணைத்து வைத்தது!

விபரீதமான வெடி என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட ஒரு தாக்கீது, டெல்லி மத்திய அரசால் மாநிலங்களுக்கு மே இறுதியில் அனுப்பப்பட்டது. பெரியாரின் உயிர் நாடியான கம்யூனல் ஜி.ஓ. கூடாது என்பதே அது! பெரியார் சிலிர்த்தெழுந்து “உடனே அரசியல் நிர்ணயசபையைக் கலைக்க வேண்டும்! வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்த பின்பே, அரசியல் சட்டம் நிறைவேற்றுவோம், என்று காங்கிரசார் அளித்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, நூற்றுக்குப் பத்துப்பேர் வாக்கைப் பெற்றுத், தாங்களே விருப்பமானவர்களை நியமித்துக்கொண்டு, இரண்டாண்டுகளாய்ச் செயல்பட்டுப், பல சட்டங்களை உருவாக்கி வரும் அரசியல் நிர்ணய சபையின் அமைப்பு செல்லாது; எங்களையும் கட்டுப்படுத்தாது” என்று இந்தியாவிலேயே ஓங்கிக்குரல் கொடுத்த ஒரே ஒரு முழு மனிதர் பெரியார் தான்! திராவிடநாடு பிரச்சினையைக் கேலி பேசிய பிரதமர் பண்டித நேருவுக்கும் பெரியார் விளக்கமுரைத்து, அடுத்த ஜூலை முதல் ஒவ்வோராண்டும் ஜூலை 1-ந் தேதி திராவிடப் பிரிவினை நாள் கொண்டாடுமாறு கழகத்தார்க்கு வேண்டுகோள் விடுத்தார்.

அரசு வாளா இருக்குமா? பாய்ந்தது “விடுதலை” மீது! 19-6-48 அன்று “விடுதலை” ஏட்டுக்கு 2000 ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டும் என்று, அதன் பதிப்பாசிரியரும் வெளியீட்டாளருமான மணியம்மையாருக்கு அரசாணை வந்தது. அம்மாதம் 24-ஆம் நாள், திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி ஆராய்ந்தது.

இந்தி தமிழ் நாட்டில் விருப்பப்பாடமாகவும், கேரள ஆந்திரக் கர்நாடகப் பிரதேசங்களில் கட்டாயப் பாடமாகவும் இருக்குமென்று. G.O. 1643 பிரகாரம், 20-6-48 அன்று ஓர் அரசாணை வெளியாயிற்று. பெரியார் இராமசாமிக்கு ஓமந்தூர் இராமசாமி பயப்படலாமா என்று