பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



நன்றிக்கடன்

ஈரோட்டில், பெரியார் குருகுலத்தில், என்னோடு சமகாலத்தில் ஒரு சாலை மாணாக்கராக (Colleagues) இருந்த சிலருள் இருவர், தமிழகத்தில் மிக உன்னதமான தகுதியும், மிக்க உயரிய பதவியும் பெற்றனர். ஒருவர் க. அரசியல்மணி. இவர் ஈ.வெ.ரா. மணியம்மையார் என்ற தகுதியும், திராவிடர் கழகத் தலைவர் என்ற பதவியும் பெற்றார். இன்னொருவர் மு. கருணாநிதி. இவர் கலைஞர் மு. கருணாநிதியாய் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ற தகுதியும், தமிழகத்தின் முதல்வர் என்ற பதவியும் பெற்றார். நானும் “அண்ணா காவியம்” இயற்றியதால் காவியக் கவிஞர் என்ற தகுதியும், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு எழுதியதால் பெரியார் வரலாற்றாளர் (Periyar's Biographer) என்ற பதவியும் பெற்றேன்.

1942-ஆம் ஆண்டு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் இண்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தபோது, அங்கே பி.ஏ. வகுப்பில் தவமணி இராசன் என்பாரும் வந்து சேர்ந்தார். இவர் தனது இண்ட்டர் வகுப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். என்னைத் தன் தோழனாக இணைத்துக் கொண்ட இவரே எனக்கு அரசியல் ஆசான் (Mentor). இருவரும் சேர்ந்து, இன்னும் சிலர் உதவியுடன் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழகத்தைத் துவக்கி, முதல் மாநாட்டையும் நடத்தினோம். தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எங்கள் செயலை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டார்கள். திராவிட மாணவத் தோழர்கள் பலரை நாட்டுக்கு அறிமுகம் செய்தோம்.

படிப்பைத் துறந்து இருவரும் ஈரோடு சென்றோம். அய்யா குருகுலத்தில் மணியம்மையார், எஸ். கஜேந்திரன், ஏ.பி. சனார்த்தனம் ஆகிய மூவரோடு நாங்கள் இருவரும் இணைந்து, குடும்பத்தைப் பெருக்கியதோடன்றியும் திருவாரூரில் முரசொலித்து வந்த மு. கருணாநிதி அவர்களையும் ஈரோட்டுக்கு வரவழைத்துக்கொண்டோம். இவருக்குத் திருமணமாகியிருந்ததால் மாதச் சம்பளம் தருமாறு அய்யாவைக் கேட்டுக்கொண்டோம்.

அய்யாவின் “குடி அரசு” இதழில் நான் ஆஸ்தான கவிஞர். 1945-ல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கவிதை எழுதி, அவருக்கு நிதி வழங்கி உதவவேண்டும் என்று “குடி அரசு” இதழில் வெளியிட்டுள்ளேன். பல்வேறு பெயர்களில் நிறையக் கவிதைகள்