பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

20


எழுதி வந்தேன். ஈ.வெ.கி. சம்பத்தும் நானும் கருப்புச் சட்டைப் படையின் முதலாவது அமைப்பாளர்களாக அய்யாவால் நியமிக்கப் பட்டோம்.

1944-ல் திராவிட மாணவர் முதல் சுற்றுப்பயணத்தின்போது, பத்து வயதுச் சிறுவனாக இயக்கத்தில் நுழைந்த வீரமணி, இன்று திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்! என்னைவிடப் பத்து வயது இளையவராயினும், வீரமணிக்கு இதனால் இயக்கத்தில் என் அளவு சீனியாரிட்டி உண்டு! இந்தச் சிறுவனை மேசைமீது தூக்கி நிறுத்தி முதன் முதலில் பேசக் கேட்டவர்களில் நானும் ஒருவன். முதல் கிராவிட மாணவர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். பின்னர் பயிற்சிப் பாசறை அமைப்பாளரானேன்.

அய்யாவின் அனுமதியோடு ஊருக்கு வந்து, திருத்துறைப் பூண்டியில், எம்.கே. ஹாஜாபீர், வி.எஸ்.பி. யாகூப், இராம, அரங்கண்ணல் (அப்போது என் தம்பியுடன் படித்து வந்தார்) ஆகியோர் ஒத்துழைப்பால் முதலாவது கருப்புச் சட்டை மாநாடும், மாணவர் மாநாடும் நடத்தினேன். எங்கு மாநாடு நடந்தாலும், என் பணியின் பங்கு, ஓரளவாவது அங்கு இருந்து வந்தது.

1946-ல் மத்திய அரசின் தபால் இலாக்காவில் அஞ்சற்பிரிப்பாளர் அலுவல் எனக்குக் கிடைத்தது. அய்யாவிடமும், அண்ணாவிடமும், கலைஞரிடமும் விடைபெற்று அரசு ஊழியரானேன். கலைஞரும் அய்யாவிடம் சொல்லிக்கொண்டு, கோவையில் திரைப்படத்துறையில் எழுத்துப் பணிபுரியச் சென்றார். தஞ்சையில் நான் சிலகாலம் பணியாற்றியபோது, அங்கே அண்ணாவின் உதவியால் புதிதாகத் துவக்கப்பட்ட “கே. ஆர். ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா”வில், இயக்கத் தோழர்களான டி. வி. நாராயணசாமி, ஆர். எம். வீரப்பன், எம். என். கிருஷ்ணன், ஜி. எஸ். மகாலிங்கம், எஸ். சி. கிருஷ்ணன், (சிவாஜிகணேசன் சக்தி நாடக சபாவில் சேர்ந்த பின்னர் வந்த) எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் நடிகர்களாக விளங்கினர். அண்ணா மூலமாக அவர்கள் அறிமுகம் கிடைத்தது. அவர்களுக்கு உறுதுணைவர்களாகக் கரந்தை என்.எஸ். சண்முகவடிவேல், டி.கே. சீனிவாசன், ஏ.கே. வேலன் ஆகிய நாங்கள் எல்லாரும் அங்கே ஒருங்கே முகாமிட்டு வாழ்ந்தோம்; அண்ணா அடிக்கடி வந்து தங்கிச் செல்வார்.

அஞ்சல்துறை ஊழியனாக ஆனபின்னரும், என்னை ஈரோட்டுக்கே மாற்றினார்கள். அய்யா அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்கள். “அட சனியனே! ஈரோட்டுக்கே போட்டானா?” என்றார்கள். அலுவல் ரயில்வே ஸ்டேஷனிலும், உண்ணலும் தங்கலும் அய்யா வீட்டிலுமாக, மூன்றாண்டுகள் இருந்தேன். நான் இருந்த காலத்தில் ஈரோட்டில் அய்யா சுமார் பத்து இடங்களிலாவது