பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


குடியிருந்திருப்பார். எல்லாம் சொந்த வீடுகள்தாமே! ஈ.வெ.கி. சம்பத், ஈ.வெ.கி. செல்வராஜ், எஸ்.ஆர். சந்தானம், எஸ்.ஆர். சாமி ஆகியோர் அய்யா குடும்பத்தினர்; எனக்கு அரிய நண்பர்கள். செல்வனும் நானும் வா போ என்று பேசிக்கொள்ளுமளவு நெருக்கம். பி. சண்முக வேலாயுதம் எனக்கு நண்பர், தோழர், புரவலர், ஆலோசகர். பின்னாளில் எனக்குத் திருமணமாகி, நான் ஈரோட்டில் குடும்பம் அமைத்தபோது, தனது வீட்டில் ஒரு பாதியை இலவசமாக ஒதுக்கித் தந்து, அதற்குக் ‘கவிஞர் இல்லம்’ என்றே பெயரும் சூட்டினார். பெரியாரை முற்றிலும் புரிந்தவர்; அபாரமான விஷயஞானம் உள்ளவர்; அய்யாவுக்கும் சண்முகவேலாயுதம் நம்பிக்கைக்கு உரியவர்! நாகரசம்பட்டி சம்பந்தமும், சண்முகவேலாயுதமும் இவ்வகையில் ஒத்த பண்பினர். இவருடைய நட்பும் எனக்கு ஒரு தனிச் சொத்தாகும். ஈரோட்டில் லூர்துசாமி, ஆர்.டி. முத்து, அங்கமுத்து, கருப்பையா, அப்பாவு ஆகியோரும் நல்ல நண்பர்கள் எனக்கு!

ஈரோட்டில் சம்பத்துக்கு என்னைத் தவிர வேறு நெருக்கமான நண்பர் கிடையாது. இதை அவரே சொல்வார். அவரும் நானும் சிந்தனையாளர் கழகம் ஒன்று (Free Thinker's Association) அங்கே தொடங்கினோம்.

அய்யா ஊரிலில்லாத நேரங்களில் எனக்குச் சாப்பாடு பெரிய அய்யா வீட்டில். சம்பத்தோ செல்வனோ, என்னை வெளியில் உணவருந்த விட்டதில்லை. “நாயக்கரின் தத்துப் பிள்ளை” என்று நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள். “குடி அரசு” இதழில் என்றுமே சம்பளமில்லாத, நிரந்தர, கவுரவ ஊழியன் நான். மணியம்மையார் தனது கனிவான உபச்சாரங்களாலும், சிறப்பான சமையல் முறைகளாலும் என்னை நன்கு கவனித்து வந்தார்கள். எங்கள் குருகுல வாசத்தின் போதிருந்தே மற்றவர்களைவிட அம்மா அவர்களுக்கு என்னிடத்தில் அன்பும் மதிப்பும் அதிகம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத குருகுலவாசமே பொற்காலமாகும்.

1948-ல் எனக்குத் திருமணம். அய்யாவே நடத்தி வைத்திருக்க வேண்டும். ஆனால் செப்டம்பர் 9-ல் முல்லை வடிவேலு திருமணத்துக்கு, அய்யா முன்கூட்டியே ஒத்துக்கொண்டதால், ‘அண்ணாவை அழைத்துப்போ’ என்று கூறினார். அப்போது இருவர்க்கும் இடையில் ஊடல் குறைந்திருந்த நேரம். ‘அய்யாவிடம் கடிதம் வாங்கிவா’ என்றார் அண்ணா. சரியென்று எழுதி வாங்கி வந்தேன். அண்ணா, சம்பத், கே.கே. நீலமேகம், சேலம் ஏ. சித்தையன், டி.கே. சீனிவாசன், சண்முகவேலாயுதம் ஆகியோர் வந்தனர். மன்னை நாராயணசாமி (மாமா) வரவேற்பாளர்.

ஊருக்குப் போக அய்ம்பது ரூபாய் அய்யாவிடம் கை மாற்று வாங்கினேன். என் திருமணம், முடிந்து திரும்ப ஈரோடு வந்ததும்