பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

212


தொடரப்பட்ட வழக்கு: பிளந்தபின் முடிந்தது! அதில் பெரியாருடன் வழக்கில் சம்பந்தப்பட்ட உடுமலை நாராயணன், பின்னாளில் தி.மு.க. மாவட்டச் செயலாளரானார். மதியழகனும் தி.மு.க. ஆனார்.

சரியான பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல என்று பெரியாரால் துவக்க முதலே எதிர்க்கப்பட்டு வந்த அரசியல் நிர்ணய சபை சுமார் மூன்றாண்டுகள் கூடி, இந்திய அரசியல் சட்டத்தை, 1949 நவம்பர் 26-ஆம் நாள் ஒருவாறாகச் செய்து முடித்திருந்தது. அது அடுத்த ஆண்டு சனவரி 26-ஆம் நாள் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது!

“சமஸ்கிருதமாகிய வடமொழி மூலமாக ஆரியக்கலாச்சாரம் தமிழ் நாட்டில் முன்னரே புகுத்தப்பட்டது. திராவிட மக்கள் ஆரியச் சூதினை நல்ல வண்ணம் உணர்ந்து கொண்டார்கள். எனவே வெள்ளையன் வடவரிடம் பேரம் பேசி நம்மை விற்றுவிட்டுப் போய் விட்டதால், இப்போது அரசியலின் பேரால், இந்தி தேசிய மொழி என்ற போர்வையில், மீண்டும் ஆரியக் கலாச்சாரமே நம் மீது திணிக்கப்படுகிறது. இந்தி தேசிய மொழி என்பதையே நாம் மறுக்கிறோம். கட்டாயமில்லை என்பது மாய்மால வார்த்தை.

நாம் நம்பமாட்டோம். எனவே 1950 சனவரி 10-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு . நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்” என்று சென்னையில் பெரியார் முழங்கினார். அத்துடன், வரவிருக்கும் சனவரி 26-ஆம் நாள் குடியரசு தினமும், நமக்குத் துக்க நாளே என்றும் அறிக்கை விட்டார்.

“புதிய குடி அரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இராசகோபாலாச்சாரி தமது கவர்னர் ஜெனரல் பதவியை முடித்துக்கொண்டு தென்னாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவது நமக்கு வெற்றிதான். பார்ப்பனரானாலும் கூடத் தென்னாட்டுக்காரர் தேவையில்லை வடநாட்டார்க்கு, என நிரூபிக்கப்படுகிறதல்லவா? மேலும், விரைவில் சுமையை இறக்கி வைத்து விட்டு இங்கே வந்து விடுவதாக ஆச்சாரியார் முன்பே கூறிச் சென்றாராம். வந்தபின் நமக்குப் பயன்படுகிறாரா பார்க்கலாம்! ஏனென்றால் பார்ப்பனர் நமக்கு அந்நியரல்லவே ” என்றார் பெரியார். சிதம்பரத்தில் பேசும்போது. நாம் சுயமரியாதைக் கொள்கைகளில் ஒன்றைக் கூடக் கைவிடவில்லை. நீதிக்கட்சியின் கொள்கைகள் தாம் சில நமது சு.ம. இயக்கக் கொள்கைகளோடு இணைந்துள்ளன! திராவிட நாட்டின் எல்லை இப்போதுள்ள சென்னை மாகாணத்தோடு நின்று விடாது; மேலும் வடக்கு நோக்கி வளரும். இத்தோடு அடங்காது!- என்றும் பெரியார் சொன்னார்.

சனவரி இறுதி வாரத்தில் சென்னையின் பல பகுதிகளில் பெரியார் சொற்பொழிவாற்றினார். ஆரிய-திராவிடப் போராட்டம்