பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

215

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆண்டில் உயர்நிலைக் கல்லூரிக் கல்வியில் அவர்கள் எத்தனை சதவீதம் பெற்றிருந்தார்கள்? இண்டர்மீடியட் 33.8 சதவீதம்; பிஏ., பி.காம். 33.6 சதவீதம்; பி.எஸ்.சி. 46.6 சதவீதம்; பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவீதம். கல்வித் துறையிலும் உத்தியோகத் துறையிலும் (இங்குள்ள மத்திய சர்க்கார் அலுவலகங்களில் உட்பட) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாசாரப்படி இவை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றுதானே பெரியார் தமது அரசியல் வாழ்வு துவங்கிய நாள் முதல் போராடி வருகிறார்! திராவிடரின் உரிமைச் சாசனமான இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைச் செல்லாமல் செய்திட ஆரியம் கச்சை கட்டி இறங்கிவிட்டது. 1950-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியற் கல்லூரிகளிலும் இடங்கிடைக்கப் பெறாத இரு மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். சென்னை மாகாண அரசு நடைமுறைப்படுத்தி வரும் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணானது என 28.7.1950 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆலமரத்தின் ஆணிவேரில் வீழ்ந்த அரிவாள் வெட்டாக இது தோன்றியது. சென்னை மாகாண அரசு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அரசுக்கு எதிராக, அந்த மாணவர்களைப் பாதுகாத்திட முனைந்து எழுந்து நின்றவர் யார் தெரியுமா? அரசியல் நிர்ணயசபை உறுப்பினரும், இந்திய அரசியல் சட்டத்தைச் செய்திடத் தென்னாட்டின் பிரதிநிதியாகச் சென்றவர்களில் ஒருவருமாகிய சர் கில்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வழக்குத் தொடுத்த இரு மாணவரில் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுத்து மூலமாகக்கூட மனுதாக்கல் செய்யவில்லை எனினும், அவருக்காக அல்லாடி மல்லாடினார் என்ற கில்லாடி அரசியல் மோசடி பின்னரே வெளியாயிற்று! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாத்திரம் எப்படியிருக்கும்? இது அரசியல் சட்த்திற்கு முரணானதுதான் என்றே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனால் வகுப்பு வாரி உத்தரவை மாகாண அரசு நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது; 1950 செப்டம்பர் திங்களிலேயே!

பெரியார் சீறி எழுந்தார். சிங்க ஏறுபோல் கர்ச்சனை புரிந்தார். தமது ஜீவ நாடியே போய்விட்டதாகச் சினந்து பொங்கினார். 1922-ல் உருவாக்கப்பட்டு1924-ஆம் ஆண்டும் உறுதி செய்யப்பட்டு, 1929-முதல் அமுலில் இருந்து வந்த பெருஞ்சலுகை ஒரு சிறிய தீர்ப்பின் மூலம் தூள் தூளாவதா? இதன் கர்த்தாவான எஸ். முத்தையா முதலியார் பெரியார் பக்கம் நின்று, அநியாயத்தை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட சமுதாயமான மாணாக்கர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் ஊர்வலமாகச் சென்று முழங்கினர். திருச்சியில் “தொண்டு” ஆசிரியர் வீராசாமி துவக்கிய அம்பேத்கர்