பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

216


மாணவர் இல்ல நன்கொடைக்காக, 1950 ஜூலை 31-ஆம் நாள், என். எஸ். கிருஷ்ணனின் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற பெரியார், அங்கும், மறுநாள் திருச்சி பொதுக்கூட்டத்திலும், வகுப்புவாரி உரிமை பறிபோன கொடுமையை நொந்த மனத்துடன் சுட்டிக் காட்டினார். 6.8.50 அன்று விடுத்த அறிக்கையில் கட்டாய இந்தி ஒழிப்புக்காக வெற்றிவிழாக் கொண்டாடுமாறும், அதே நேரத்தில் வகுப்புவாரி உரிமைக்காகக் கிளர்ச்சி துவக்குமாறும் கேட்டுக் கொண்டார். 13-ஆம் நாள் சென்னைப் பொதுக் கூட்டத்தில் முழக்கமிட்டார். 14-ஆம் நாள் பெரியார் வேண்டுகோளுக்கிணங்க, நேரடி நடவடிக்கை முழு வெற்றியளித்தது. கடையடைப்பும், கல்வி நிலையங்கள் புறக்கணிப்பும், தொழிற்சாலைகள் வேலை நிறுத்தமும், பெரியார் தலைமையில் உரிமை முழங்கிய ஊர்வலமும் பரிபூரண வெற்றி! புதிதாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமும் இவற்றில் முழு ஒத்துழைப்பு நல்கியது. பெரியாரும், அடுத்து நடக்கும் இது சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சியினரையும் அழைப்பதாகக் கருத்தறிவித்தார்.

சேலம் ஏ. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் திடீர் மறைவு கேட்ட பெரியார், மிகவும் துக்கம் மேலிட்டுச், சுற்றுப் பயணத்திலிருந்தவாறே, ஆகஸ்ட் 22-ஆம் நாள் சேலம் சென்று, இல்லத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டார். அடுத்து, மகிழ்ச்சி பெறத்தக்க சம்பவமாகப் பெரியார் கருதியது காமராசர் வெற்றி. அதாவது 1940-முதல் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வீற்றிருந்த காமராசர், 29.8.50 அன்று நடந்த கட்சித் தேர்தலிலும், 155 வாக்குகள் பெற்று வென்றாராம். இவரை எதிர்த்த கோவை சி.பி. சுப்பையாவுக்கு 99 வாக்குகளாம்.

14.7.50 அன்று திருச்சி புத்தூரில் 50,000 ரூபாயில் கழகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. அதில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி, அந்தக் கட்டடத்திற்குப் பெரியார் மாளிகை எனப் பெயர் சூட்டியது; 10.9.50 அன்று! வேலூர் ஈ. திருநாவுக்கரசு அதைத் திறந்து வைத்தார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக் கிளர்ச்சியாக, நமது நாட்டு நெசவாளர் துயர்துடைக்க, வட நாட்டுத் துணிக்கடைகள் முன்பாக மறியல் போராட்டம் துவக்குவது; ஒவ்வொரு மாதமும் 14-ந் தேதியன்று வகுப்புவாரி உரிமை நாள் கொண்டாடுவது என்று பல முடிவுகள் அன்று மேற்கொள்ளப்பட்டன. 10.9.50ல் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சர் ஆர்.ஆர், திவாகருக்குக் கருப்புக் கொடி பிடித்தது. வகுப்புரிமை கோருவதன் நியாயத்தை இந்த ஒரு சிறிய புள்ளி விவரம் தெரிவிக்கும்; 1950-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் நிலைமை: