பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 கொண்டு வந்தார். சோவியத் தலைவர் ஸ்டாலின், 1953 மார்ச் 6-ஆம் நாள் மறைந்த போது, “இமயமலை சாய்ந்ததா?” என்று வினவிப் பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைப் புலப்படுத்தினார். உலகப் பெரியார்களில் இவர்தான் கடைசிப் பெரியார் என்றும் அறுதியிட்டுக் கூறினார். கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை தோழர் எஸ். ஆர். சாமி மறைந்ததற்கு மிகவும் மனம் வருந்திக், கொள்கை வீரரான அவர் அநாதரவாக விட்டுச் சென்ற குடும்பத்திற்கு உதவி நிதி திரட்ட வேண்டுகோள் விடுத்துத், தாம் 100 ரூபாய் தந்து வழிகாட்டினார். அதே போலத் தமது நெருங்கிய சகாவும் பகுத்தறிவுப் பேராசானுமாகிய கைவல்யம் 22.4.53-ல் மறைந்தபோது தலையங்கம் எழுதி “விடுதலை” வாயிலாக அங்கலாய்த்தார். கோவையில் 6.5.53-ல், சர்.ஆர்.கே. சண்முகம் மறைவினால் மிகுந்த துயருற்று, அனுதாபக் கூட்டத்தில் கலந்து கொண்டார் பெரியார்.

சென்னையில் 23.3.53 அன்று நடைபெற்ற சிறப்பான சாதி ஒழிப்பு மாநாட்டில், பெரியாருடன், காமராசர், டாக்டர் சுப்பராயன், டாக்டர் வரதராசலு நாயுடு முதலியோர் கலந்து கொண்டனர். பெரியார் பெங்களூர், புதுச்சேரி முதலிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்று வந்தார். நாடெங்கும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம், தென்பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் -இவை நடத்திய கூட்டம், மாநாடுகளில் பங்கேற்றார். திருச்சி பெரியார் மாளிகையில், பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி துவங்கினார். “விடுதலை”யில் பக்தியைப் பரப்பிடவே இசை பயன்படுத்தப்படுவதைத் கண்டித்தும், திராவிடக் கல்வி ஓடையில் ஆரிய முதலைகளின் அட்டகாசத்தை வெளிப்படுத்தியும் செய்திகள் வெளியிட்டார். டெல்லியில் பெரிய செயலாளர்களாக இருந்த ஐ.சி எஸ். பார்ப்பன அதிகாரிகளான எஸ். ஏ. வெங்கட்ராமன், எஸ். ஒய். கிருஷ்ணசாமி ஆகியோர் மீது ஊழல் குற்றம் சுமத்தி, வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்கள் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுகிறவரை “விடுதலை” ஓயவில்லை . நினைவூட்டி வந்தது! 5.5.53 திருச்சியில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரியார், தனக்கும் பெரியாருக்கும் வெளியாரை நம்பிப் பிழைப்பது பிடிக்காது என்றார். 25.4.53 லால்குடியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் நடிகர் சிவாஜிகணேசன் கடைசியாகவும், நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதன் முறையாகவும் பங்கேற்றனர்.

ஈரோட்டிலிருந்த சில பழைய கட்டடங்களை விற்று விட்டுப், புதிதாக ஒன்று நகரமன்றமாக (Town I fall) அமைக்க விரும்பிப், பெரியார், சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் செயலாளர் என்ற முறையில் அறிவிப்புத் தந்திருந்தார்.

1952-ல் கொல்லை வழியாக ஆட்சிக்கு வந்த இராசகோபாலாச்சாரியார். தமது வழக்கமான, சூத்திரர் கல்வி வளர்ச்சியில் கைவைக்கும்