பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

248


தலையிட்டு, டாக்டர் நாயுடுவைக் கண்டித்து, ஆச்சாரியாரைக் காப்பாற்றினார். ஆந்திரம் பிரிந்ததால் இனிச் சட்டமன்ற நடவடிக்கைகள் தமிழிலேயே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்தது. ஆச்சாரியார் சட்டமன்றத்தில், இதுவரை நடந்த சுயமரியாதைத் திருமணங்களைச் சட்ட சம்மதம் உடையதாக்க முயற்சி எடுத்துள்ளதாகக் கூறி, இனி நடக்கும் சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்தால்தான் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டினார்.

1953 டிசம்பர் 20-ஆம் நாள் சென்னையில் நபிகள் நாயகம் பிறந்த தினவிழா. பெரியாரும் முதல் மந்திரி ராச கோபாலாச்சாரியாரும் கலந்து கொள்ளும் அதிசயத்தைக் காண, மக்கள் வெள்ளமாகத் திரண்டனர். மாலை 6 மணிக்குத் துவங்கும் கூட்டத்திற்குப் பெரியார் தமது வழக்கப்படி 5.30 மணிக்கே வந்துவிட்டார். முதல்வர் 6.20க்கு வந்தார். பெரியார் எழுந்து பணிவுடன் வணங்க, முதல்வரும் பதிலுக்கு வணங்க, இருவரும் அடுத்தடுத்து இருக்கைகளில் அமர்ந்தனர். அன்பார்ந்த எதிரிகளான நண்பர்களை ஒருங்கே கண்டு, நாடு வியந்தது! பெரியார் உடல் நலமில்லாதிருந்ததை அறிந்திருந்ததால், அடுத்த நாள், 21.12.53 காலை 9.30 மணிக்கு, முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றம் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று பெரியாரின் இல்லம் போந்து, நலம் விசாரித்து 45 நிமிட நேரம் தங்கியிருந்தார்! மணியம்மையாரிடமும் நலம் கேட்டறிந்தார்.

“ஒரு பெரியாரை நாம் கொண்டாடுவது ஏதோ பலன் கிடைக்கும் என்பதற்காக அல்ல. அவருக்கு அதனால் நன்மையும் இல்லை. அவருடைய போதனைகளைப் பின்பற்றுமாறும், அவருடைய நடத்தைகளைச் செயல்களை நம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்றுமாறும் மக்களுக்கு உணர்த்தவேயாகும். எந்த ஒரு கொள்கையும் உலகத்திலுள்ள எல்லாத் தரப்பு மக்களாலும் எல்லாக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படுமாறு சொல்வது அரிது. ஆனால் நபி அவர்களின் உபதேசங்கள், கோட்பாடுகள், நடப்புகள் இவைகளில் பல எல்லாராலும் ஒப்புக் கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் தகுந்தவை. மறுக்க முடியாதவையாக இருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும். என்னைப் பொறுத்தவரை நபி அவர்களை ஒரு மகான் என்று கருதுவதில்லை! மனிதத்தன்மை படைத்த சிறந்த மனிதனாகத்தான் கருதுகிறேன். ஒரு கடவுள் உண்டு, பல கடவுள் இல்லை என்று அவர் சொன்னாரே? இது உனக்கு ஏற்புடையதா? என்று கேட்டால் ஆயிரம் கடவுள்களைக் கட்டி அழுகின்ற நம் மக்களுக்கு இது . எவ்வளவோ மேல்; முதலில் இதை ஒப்புக் கொள்ளட்டும்; பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பேன். அடுத்து நபி அவர்கள் சொன்னது, மனித சமுதாயத்தில் உயர்வு தாழ்வு பேதமில்லை; அனைவரும் சமமான