பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்





 
 15. எரித்தார்
தேசியக் கொடி எரிப்புக் கிளர்ச்சியும், நிறுத்தமும் - இராமன் படஎரிப்பு - தட்சிணப் பிரதேச எதிர்ப்பு - வினோபா சந்திப்பு - மலையப்பன் வழக்கு - பிராமணாள் பெயர்ப் பலகை அழிப்பு - சாதிப் பகுதி உள்ள அரசியல் சட்டம் எரிப்பு - குத்துவெட்டு வழக்கில் தண்டனை - 1955 முதல் 1957 முடிய.

பெரியார் தாயகத்தில் இல்லாத நேரத்தில்தான் காமராசர் ஆட்சி நாடகக் கட்டுப்பாடு சட்டத்தை நிறைவேற்றியது. எனினும் பெரியார் தொண்டர்கள் வாளா இருக்கவில்லை. முழுமூச்சாக எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களை ஓரணியில் திரட்டியும் காண்பித்தனர். அதேபோல், பெரியார் சிங்கப்பூரிலிருந்து தாயகம் நோக்கிக் கிளம்பிய அதே வேளையில் சிங்கப்பூர் தோழர்களின் பேரன்புப் பெருமழையில் நனைந்து தோய்ந்து, அதையே நினைந்து கனிந்து, உருகிக் கண்ணீர் பெருகிக் கன்னங்களில் வழிந்தோடித், தங்கத் தகட்டை மறைக்கும் வெள்ளிக்கம்பிகள் போல் முகத்தின் பெரும்பாகத்தை மறைக்கும் அந்த வெண்ணிறத் தாடியினூடே பளபளக்கப், பிரியா விடை பெற்று, எஸ்.எஸ். ரஜூலா கப்பலில் தந்தை பெரியார் அடியெடுத்து வைத்த அதே வேளையில் - திருச்சியில், 9.1.55 அன்று, பெரியார் தொண்டர்கள், மாநாடு ஒன்று கூட்டித், தலைவரில்லா நிலையிலும், தாம் எதற்கும் சித்தமாயுள்ளதை மொத்தமாய்த் திரண்டெழுந்து கூடி நின்று உலகுக்கு உணர்த்தினார்கள்.

17.1.55 அன்று பிற்பகல் 50,000 மக்கள் ஓரணியாய்க் கருஞ்சட்டைப் பேரணியாய் இணைந்து நின்று தந்தை பெரியார்க்கு மகத்தான ஊர்வலம் எடுத்து, வரவேற்புக் கொடுத்தனர், சென்னையில் திரண்டோர். பின்னர், கீழ்த்திசை கொண்ட, வாழ்த்துக்குரிய தந்தை