பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

264


பெரியாருக்குத் தமிழகத்தார் தத்தம் ஊர்கள்தொறும் நல்வரவேற்பு நல்கினர். 23-ந் தேதி திருச்சியில் நிர்வாகக்குழு; 25 ஈரோட்டில் வரவேற்பு; 30 சென்னை சட்டக் கல்லூரி; அடுத்து 4-சென்னைப் பச்சையப்பன் கல்லூரி - என்று தொடங்கிய சுற்றுப்பயணத் திக் விஜயம், பிப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்தது. மார்ச் திங்களிலும் ‘மார்ச்’ செய்தார். ஆனால் 14.3.55 முதல் 17.3.55 வரையில் சிறிது நலக் குறைவு நேர்ந்ததால், சுற்றுப் பிரயாணத் திட்டத்தில் சற்றே மாறுதல் - ரத்துச் செய்யவில்லை - மாற்றம் செய்து, தொடர்ந்து கிளம்பிவிட்டார் பெரியார்!

1955 பிப்ரவரி 7-ஆம் நாள் பி.என். ராஜ்போஜ் சென்னை வந்து பெரியாரைச் சந்தித்து நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார். தமது கீழை நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின்போது தாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த மான் கொம்புத் தடி ஒன்றினைப் பெரியார் ராஜ்போஜுக்கு அன்புடன் அளிக்க, அவரும் வேலைப்பாடமைந்ததும், லண்டனில் தமக்கு வழங்கப்பட்டதுமான பர்ஸ் ஒன்றினைப் பெரியாருக்குப் பண்புடன் அளித்தார்.

அகில இந்தியக் காங்கிரஸ், ஆவடியில், பிரம்மாண்டமான காமராசர் ஆட்சியின் ஏற்பாடுகளுக்கிடையே அழகாகக் கூடி, சோஷலிசத் தீர்மானம் நிறைவேற்றிக் கலைந்தது. வந்திருந்த மக்கள், மிகப்பெரிய இட்லி இயந்திரத்தைப் பார்த்து மலைத்து வாய் பிளந்து நின்றதாகப் பத்திரிகைகள் வர்ணித்தன.

1955 பிப்ரவரி 15-ஆம் நாள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று கேட்ட கழகத் தோழர்களுக்குப் பெரியார் தந்த விவர ஆணை எப்படியென்றால் - காங்கிரசிலுள்ள வேட்பாளர்களின் தன்மைக் கேற்றபடி, ஆதரிக்கலாம் என்பதே! காமராசருக்குப் பூரண ஆதரவா என்பதன் அடுத்த கட்டம் இது! பிப்ரவரி 16-ஆம் நாள் “விடுதலை”யில் ‘டி.டி.கே, நாடகம்’ என்ற தலையங்கம் வெளியாயிற்கு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி மத்திய நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டதை, நம்பாத நிலையின் விளைவு இது!

1955 மார்ச் 22-ஆம் நாள் - அதாவது பெரியார் சிறிது அசவுக்கியமுற்றிருந்து, அந்த மாதம் முழுவதும் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருந்த நிகழ்ச்சிகளில், 14 முதல் 17 வரை சிறு தொய்வு உண்டாகுமாறு செய்து, பின்னர் மேற்கொண்ட பிரயாணத் திட்டத்தின் இடையில் பெரியார் வெளியிட்டிருந்த தன்னிலை விளக்க அறிக்கை மிகச் சிறப்பானதாகும்! “ஜனவரி 17-ஆம் நாள் கிழக்கு நாடுகளிலிருந்து திரும்பிய பின்னர். இதுவரை 60, 70 ஊர்களுக்கு மேல் சென்று வந்துள்ளேன், எல்லாக் கூட்டங்களிலும் நான் சொல்ல நினைத்த கருத்துகளைச் சொன்னதோடு, கூட்டத்தில் கண்ணீர்த் துளிகளும், கம்யூனிஸ்டுகளும் தொல்லை தரும் வகையில் கேட்ட