பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

265

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


எல்லாக் கேள்விகளுக்கும் பதிலும் சொன்னேன். 1947-ல் வாங்கிய MSY 3500 எண்ணுள்ள என் கார் என்னைவிடக் கிழடாகிவிட்டது. இது! ஏறத்தாழ மூன்று லட்சம் மைல் ஓடியிருக்கிறது. இதை சர்வீஸ் செய்தால் ஆயிரம் ரூபாயும், பழுது பார்த்தால் பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாயும், ஆகும் என்கிறார்கள். ஆகையால் எனக்குவரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன். சிறிது காலம் ஏற்காட்டில் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். இனி என்னை அழைப்பவர்கள், கூட்டமானால் ஐம்பது ரூபாயும், திருமாணமானால் நூறு ரூபாயும் அனுப்பித்தர வேண்டும்” என்பதே அது.

இந்த அறிக்கையின் உட்பொருளை உணர்ந்த மெய்ப்பொருளன்பராகிய பொதுச் செயலாளர் எஸ்.குருசாமி, பெரியார் கார் நிதி என்பதாக ஒன்றைத் துவக்கி, ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் சிறுகச் சிறுகச் சேமித்துத் திரட்டிக், காரை சிம்ப்ஸன் கம்பெனியில் விட்டு, வசதியுள்ள வேனாக உருமாற்றிக் கேட்டதைவிட அதிகமாகவே 18,659 ரூபாய் 3 அணா நிதியும் சேகரித்துச் சென்னையில் ஒரு விழா நடத்தி, 1955 டிசம்பர் 25-ஆம் நாள், கிறிஸ்துமஸ் தினத்தன்று, புதிய வண்டியைப் பெரியாருக்கு வழங்கினார்! தொகை மேலும் மிகுந்ததால், ஒரு டேப்ரிக்கார்டரும் பெரியாருக்கு விழாக்குழுவினர் அன்பளிப்பாகத் தந்து உதவினர். அங்கு நன்றிப் பெருக்கால் பெரியார் அதிகம் பேசவில்லை. எவ்வளவோ வகையான நாற்காலிகள் சோபாக்கள் எங்கள் மாளிகையில் இருந்தும், சாய்வு நாற்காலி எனப்படும் ஈஸிச்சேர் ஒன்று கூடக் கிடையாது. நான் அதை உபயோகிக்க விரும்புவதேயில்லை. சோம்பலாகச் சாய்ந்து கிடப்பதும் ஈஸிச்சேர் பாலிட்டிக்ஸ் பேசுவதும் எனக்குப் பிடிக்காது”- என்று பேசினார் பெரியார்.

27.3.1955 அன்று தஞ்சை நகரில் நடந்த வரவேற்பு விழாவில் பெரியாருக்கு வெள்ளிப்பட்டயத்தில் வாசகங்கள் பொறித்து, அன்புடன் வழங்கினார்கள். அதற்கு மறுநாள் பெரியார் தஞ்சையிலிருந்தார். அன்று அழகிரி நினைவுநாள், எனவே அழகர்சாமியின் கல்லறை அமைக்கப்பட்டடிருந்த ராஜாகோரி என்னும், தஞ்சாவூர் கருந்தட்டாங்குடி வடவாற்றின் கரையிலுள்ள இடுகாட்டுக்குச் சென்று; ஒரு மலர்மாலை வைத்து வரலாம் என்று பெரியார் கருதினார். 19.2.1954 அன்று மறைந்த நெடும்புலம் சாமியப்பாவின் கல்லறையும் அங்கு தானிருந்தது. பெரியார் அங்கு சென்றபோது இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்பதற்காக அறிவிக்கும் கல் ஒன்று நடப்பட்டிருப்பதைக் கண்டு மனம் பதறினார். அருகிலிருந்த தோழர்கள் அப்போதே அதை அகற்றி வடவாற்றில் விட்டெறியத் துடித்தார்கள். ஆனால் இம்மாதிரி வன்முறைச் செயல்களில் என்றுமே விருப்பம் காட்டாத முதுபெரும் தலைவர் பெரியார், நகராட்சிக்கு விண்ணப்பம்