பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

274


சிந்தனைக்குரியவையாம்:- மாணவர்கள் பிஞ்சு அறிவு கொண்டவர்கள். அந்த அறிவு முற்றும் வரை அவர்களுக்கு எதிலும் உறுதியாகப் பற்றும் எண்ணம் பிறக்காது. அறிவு முற்றும் வரையில் மாணவர்கள் எதையும் கற்பதிலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். படித்துப் பரிட்சையில் தேர்ச்சி பெறுவதிலேயே முழு முயற்சியும் காட்ட வேண்டும்.

பட்டப் படிப்பெல்லாம் அனுபவப் படிப்பைவிட மட்ட ரகமானதுதான், வக்கீலுக்குப் படித்தவர், எதை எப்படிப் புளுகினால் கேஸ் ஜெயிக்கும் என்பதற்காகத், தனக்குப் பொய்யென்று தெரிந்ததையும், மெய்யென்று தீர்ப்பு கூறும் படிச் செய்ய, என்னென்ன தில்லுமுல்லுகள், புரட்டுகள் வேண்டுமோ அத்தனையும் செய்து, பொய்யை ஓங்கி அடித்துப் பேசினால், பெரிய வக்கீல் என்று பெயர் பெறுகிறார். அதனால் வக்கீல்கள் அறிவாளிகள் என்று கூறிவிட முடியாது! அதே போல் வாத்தியார்களும், புரோபசர்களும் ஏட்டுக்குள் இருப்பதை மட்டும் தெரிந்திருப்பார்கள். முக்கியமான உலக அறிவு இவர்களுக்கு இருக்காது! ஆகவே , உலகத்துடன் பழகினால்தான் பொது அறிவு வளர முடியும் என்றார் பெரியார்.

பம்பாயில் புத்தர் கொள்கைப் பரப்பு மாநாடு, சாதி ஒழிப்பு மாநாடு, திராவிடர் கழக மாநாடு ஆகிய மூன்று மாநாடுகள் மிகுந்த சீரோடும் சிறப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தன. பெரியாரும் அவரது அகலாத் தளபதிகளும் மூன்று நாட்களிலும் பங்கு பெற்றுக் கருத்துரைகளும், அறிவுரைகளும் வழங்கிட வேண்டுமெனத் தோழர்கள் விரும்பினர். நெடுநாட்களாக நல்ல முறையில் விளம்பரங்கள் செய்து வந்தனர். பெரியாரும் தமது -சகாக்களோடு, தமது காரிலேயே, 17.3.1956 அன்று புறப்பட்டு, பம்பாய் போய்த் சேர்ந்தனர். மாநாடுகள் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் தொடர்ச்சியாகவே எழுச்சியுண்டாக்கும் வண்ணம் நடைபெற்றன.

புத்தருடைய 2500 ஆவது ஆண்டுவிழா 27.5.56 அன்று சென்னை ராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பில் நடைபெற்றபோது, அதில் பெரியாரும் கலந்து கொண்டார். அதற்கு முதல் நாள் சென்னையில் மிகப்பெரும் பொதுக் கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றுப் பெரியார், புத்தர் யாரென்பதைத் தெளிவுப்படுத்தினார், நாடெங்கும் இந்தச் சமயத்தில் புத்தர் விழாவினை மக்கள் சிறப்புடன் கொண்டாட வேண்டுமென்றும் விழைந்தார். "நெஞ்சில் தீரமும் அறிவில் விளக்கமும் ஏற்பட்டவர்கள், குறைந்த அளவுக்கு, இனிமேல் உருவ வணக்கம் செய்வதில்லை: உருவக் கடவுள்களுள்ள கோவில்களுக்கு வணக்கத்துக்காகப் போவதில்லை; எவ்வித மதக் குறியும் இட்டுக் கொள்வதில்லை; என்று உறுதி செய்து கொள்ள வேண்டும், டாக்டர் அம்பேத்கர், துணிவுடன் ஆரியத்திலிருந்து அடியோடு விலகிவிட்டார் நாடாளு மன்றத்திலேயே