பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்31



 
1. பிறந்தார்
பெரியார் பிறக்கு முன்பு தமிழ்நாட்டின் நிலைமை - பெற்றோர், உடன் பிறந்தோர் பெரியார் பிறந்த நாள் 17 செப்டம்பர் 1879.

பெரியார் என்ற சொல்லுக்கு உரியார் உலகில் ஒரே ஒருவர்தாம் இருந்து வந்தார்; இன்றும் இருந்து வருகிறார்; இனி என்றுமே இருந்து வருவார். செயற்கரிய செயல்களைத் தொடர்ந்து செய்து முடித்துக் காட்டிய, ஈடற்ற வெற்றி கண்ட, இராமசாமி என்னும் அந்தப் பெருமகனை உலகம் பெரியார் இராமசாமி என்று போற்றிப் புகழ்ந்து, ஏற்றிப் பாராட்டியது. மனிதகுலம் அனைத்தையுமே தம் மக்கள் என்று கருதிச் சொந்தம் பாராட்டி, பந்தம் பாசம் பரிவு காட்டிய, அந்தச் சிந்தனைச் செல்வரை உலகம் தந்தை பெரியார் என்று சிந்தை மகிழ்வுறக் கொண்டாடுகின்றது.

விந்தைசூழ் மனிதரான அந்தப் பெரியார் இராமசாமி, இந்தச் செந்தமிழ் நாட்டில்தான் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார். தமிழ்ப் பெருங்குடியினரின் மூச்சுக் காற்றாகி உயிர்ப்பில் புகுந்து, ஊனில் கலந்து, உணர்வில் நிறைந்து இரண்டறத் தோய்ந்து, நிரந்தரமாய்ப் படிந்து போனார்.

அன்னார் பிறப்பதற்கு முன்னால், நமது தமிழ்நாட்டின் நிலை என்ன? தமிழ் மொழியின் கதி என்ன? தமிழ் மக்களின் தரம் என்ன?

உலகத்தில் முதன் முதலில் மனித இனம் தோன்றிய இடமே தமிழ்நாடுதான் - எனவே முதன் முதலில் தோன்றிய மொழியும் தமிழ் மொழிதான் - எனவே தொன்மை வாய்ந்த தமிழகத்தில் தோன்றிய மனித இனமாகிய தமிழினமே மக்கள் குலத்தின் முதன்மை இனம் - என ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு நிறுவியுள்ளனர். தமிழ் மக்கள் விந்திய மலையினைத் தாண்டி வடபுலத்திலும், கடலைக் கலங்களால் கடந்து ரோம கிரேக்க நாடுகளோடும் பர்மா, மலேயா, சீனம் போன்ற நாடுகளோடும் மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் வணிகம் நடத்தினர்; சில நேரங்களில் ஆட்சியினைக் கைப்பற்றி அரசும் நடத்தினர்.

உலகில் மிகச் சிறப்புடன் விளங்கிடும் உயர் தனிச் செம்மொழி தமிழ் மொழியே ஆகும். பழைய மொழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியவை சிதைந்தும் தேய்ந்தும் உலக வழக்கொழிந்தும்