பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கேட்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கம்யூனிஸ்டுகளும் சேர்கிறார்களே எனக் காமராசரே கண்டிக்கிறார். அண்ணா, தமது தம்பிமார்களின் விருப்பத்தையும் வேண்டுகோளையும் மதித்து, 20.4.62 அன்று மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார், இனி அண்ணாவின் குரல் டெல்லியிலும் எதிரொலிக்கும்!' - பெரியாருக்கு மிகுந்த எரிச்சலூட்டும் செய்திகளல்லவா இவை? நன்றி மறவாமைக்கும், புத்தி கூர்மைக்கும் இலக்கணமாயிருந்த (இன்னொரு) சீட்டா 1.5.62 அன்று இரவு 10 மணியளவில் செத்துப் போய்விட்டது. 7 வயது வரை பெரியாரிடம் பிரியத்துடன் வாழ்ந்து வந்த அந்தச் செல்ல வளர்ப்பின் மறைவு பெரியாரை வருத்தியது.

சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி தனது தோல்வியைப் பொருட்படுத்தவில்லை. ராஜாஜி - தி.மு.க. உறவைக் கண்டித்து, சம்பத், கூட்டங்களில் பேசிவந்தார். “நாத்திகம்“ பத்திரிகையின் போக்கு சரியில்லையென “விடுதலை” 20.4.62 அன்று செய்தி வெளியிட்டது. காமராசரின் அரசு 65 வயதான முதியோர்க்கு மாதம் 20 ரூபாய் உதவித் தொகை வழங்க ஆணையிட்டது; அங்கவீனராகவோ தொழு நோயாளராகவோ இருப்பின் 60வயதிலிருந்தே இந்தத் தொகையினைப் பெறலாம். இப்போதெல்லாம் கண்ணீர்த் துளிகளைத் தாக்கி வெளிவரும் செய்திகள் “விடுதலை” யில் நாடோறும் இடம்பெற்றன.

குன்றக்குடி அடிகளார் தலைமையில், மணப்பாறை தமிழ் மன்றத்தில் 6.5.62-ல் பெரியார் பேசும்போது, ‘இந்தி எதற்காக பொது மொழியாக இருக்க வேண்டும்? இந்தியா என்பது என்ன, ஒரே நாடா? தமிழ்நாடு ஏன் இந்தியாவோடு இந்தியாவுக்குள் இருக்க வேண்டும்? தனிநாடாக விளங்குவதில் என்ன தடை? என்ன நாட்டம்?’ என்ற வினாக்களை வீரமுழக்கமாக வெளியிட்டார். மாநிலங்களவையின் உரையில் அண்ணா, திராவிட நாடு பிரச்சினையை விளக்கி, வலியுறுத்தினார். நேரு இந்த உரையை உதாசீனப் படுத்தியதாக “விடுதலை" செய்தி தந்தது.

பெரியார், “பிரதேசமொழி” என்று 12.5.62 “விடுதலை” ஏட்டின் தலையங்கப் பகுதியில் கட்டுரை எழுதும் போது, தமிழ் தமிழ் என்று கூறி இங்கிலீஷை ஒதுக்கி விடக் கூடாது என்னும் தமது கருத்தை வலியுறுத்தியிருந்தார். சென்னையில் புத்த ஜயந்திக் கூட்டத்தில் 20.3.62 அன்று திருமதி ஜோதி வெங்கடாசலம் (நல்வாழ்வு அமைச்சர்) தலைமையில் பெரியார் கலந்து கொண்டார். 19ந் தேதி வாழப்பாடியில் உரையாற்றுகையில், ஒழிக்கப்பட வேண்டிய மூன்று பேய்களைப் பற்றியும் ஆராய்ந்து நோய்களைப் பற்றியும் பெரியார் குறிப்பிட்டது புதுமையாகத் தோன்றிற்று! கடவுள்–சாதி மதம் – ஜனநாயகம் ஆகியவை மூன்று பேய்; பார்ப்பான், பத்திரிகை, அரசியல்கட்சி, தேர்தல், சினிமா ஆகியவை 5 நோய். இவற்றை விரட்டி ஒழித்துக் கட்ட வேண்டும்