பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

338


என்று பெரியார் பேசினார். திருச்சி மாவட்டத்திலுள்ள இடையாற்று மங்கலம் திராவிட விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் கழகத்தின் ஆக்கப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்கள். 24.5.62 அன்று மாவட்டச் செயலாளர் ஆனைமுத்து தலைமையில் பெரியாரிடம், ரூ. 3580 பெறுமானமுள்ள தென்னந்தோப்பு ஒன்றின் பட்டயத்தை வழங்கிப் பெருமை தேடினர். இவை யாவும் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பெயராலேயே இயங்கி வந்தன.

'இராமாயணம் மடமை நிறைந்த பொய்க் களஞ்சியம், காலம் பற்றிய மதியீனமான புரட்டு என்னும் விதத்தில் பெரியாரால் எழுதப் பெற்ற பெட்டிச் செய்தி ஒன்று “விடுதலை” ஏட்டுக்கு அணி செய்தது. “விடுதலை” ஏட்டில் இப்போதெல்லாம் புதுமையாக போட்டோ பிளாக்குகள் அடிக்கடி அச்சிடப்பட்டு வந்தன. சென்னைக் கார்ப்பரேஷனுடைய நிர்வாகம் ஊழல் மலிந்ததாயிருப்பதாகவும் பல்வேறு செய்திகள் பிரசுரமாயின். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியானதும் தமது சம்பளத்தைக் குறைத்து ஆடம்பரங்களை ஓரளவு கட்டுப்படுத்தினார். மாயூரத்திலுள்ள தருமபுரம் பண்டார சந்நிதி ஆண்டுக்கு ஒரு முறை ஆள் சுமக்கும் பல்லக்கில் ஏறிப், பட்டணப் பிரவேசம் வருவது வழக்கம். இதை நிறுத்துமாறு மறியல் செய்வதெனத் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் பண்டார சந்நிதிக்கு பகிரங்கக் கடிதம் வரைந்தனர், 22.5.62 அன்று. பின்னர், தலைமைக்கழகம், விரைவில் வருணாசிரம எதிர்ப்புக் கிளர்ச்சி துவங்க இருப்பதால், இப்போது இது வேண்டாமெனக் கருத்துரைக்கப்பட்டது. ஏராளமான போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஆண்டு மே 29-ஆம் நாள் தருமபுரம் ஆதீனகர்த்தர் பல்லக்குப் பவனி வந்தார். ஆனைமலை நரசிம்மன் இப்போது பெரியாருடன் சுற்றுப் பணயங்களில் தொடராமல், திருச்சியிலுள்ள ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி முதலிய அமைப்புகளின் தாளாளராக இருந்து, கவனித்து வந்தார்.

இந்தி எதிர்ப்பு வீராங்கனை மூவலூர் மூதாட்டியார் இராமாமிர்தம் அம்மையார் 27.7.62 அன்று மாயூரத்தில் இயற்கை எய்தினார். திராவிடர் கழகச் சார்பில் சித்தர்காடு இராமையாவும், திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் நாவலர் நெடுஞ்செழியனும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

1962-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் பெருமளவில் விலைவாசி எதிர்ப்பு மறியல் வளர்ச்சியை நாடு தழுவிய அளவில் நடத்தியது. கழகத்தின் அனைத்துத் தலைவர்களும் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கில் சென்னையிலும் மாவட்டத் தலைநகரங்களிலும், பெரிய ஊர்களிலும் வருவாய்த்துறை அலுவலகங்களின் முன்னர் மறியல் செய்து கைதாயினர். அரசு, மிக்க உறுதியுடன் நின்று, அடக்குமுறை மிரட்டல் ஆகிய எல்லா