பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


முறைகளையும் கையாண்டு வந்தது. சிறையிருந்தோரிடம் வற்புறுத்தி மன்னிப்புக் கடிதங்கள் பெறப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர். அரசின் சார்பான ஏடுகள் ( “விடுதலை " உட்பட) இந்த மன்னிப்புக் கோரி விடுதலை பெறும், சேதிகளைப் பெரிதுபடுத்தின. 2.8.62 அன்று எஸ்.எஸ் இராஜேந்திரன் 1000 ரூபாய் ஜாமீனில் விடுதலை என்ற கணக்கு. சென்னையில் மன்னிப்புக் கேட்டவர் 1000 பேர் என்ற செய்தி. அறப்போரின் பெயரால் காலித்தனங்கள் நடக்கின்றன என்று, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துரைக்கும் பிரமுகர்கள் பேச்சு. பத்திரிகைகளின் எண்ணம் ஆகியவை “விடுதலை"யில் தொகுத்து வெளியிடப்பட்டு வந்தன.

கலைஞர் மு. கருணாநிதி தஞ்சையில் மறியல் செய்து 3 மாத தண்டனை பெற்றார். சென்னைச் சிறையில் கொடுமைக்குள்ளான கோ.சு. மணி பிணமாக வெளியில் வந்தார். மதுரையில் அதே போலப் பொற்செழியன் மாண்டார். திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்பராயன், பம்பாயில் கவர்னராக நியமிக்கப் பெற்றதால் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் தோற்றது; திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கந்தப்பன் வென்றார்.

“தேர்தலில் பொதுவாக ஒழுக்கக் கேடுகள் அதிகமாகிவிட்டன. உட்பகை பெருகியுள்ளது. திராவிடர் கழகத்தார் தவிர மற்றவர் நேர்மையாக ஈடுபடுவதில்லை. கண்ணீர்த் துளிகள் கலவரம் செய்வது என்றே துணிந்து விட்டனர். இந்நிலையில், இம்மாதிரி வன்செயல்களில் இறங்கும் அரசியல் கட்சிகளைச் சட்ட விரோதமாக்கலாம்; கட்சிகளுக்குப் பண வசூல் செய்வதைத் தடுக்கலாம்; கட்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டுமென ஏற்படுத்தலாம். சர்வாதிகாரம் போலத் தோன்றினாலும் இவை தேவை" என்று பெரியார் வற்புறுத்திப் பேசியும் எழுதியும் வந்தார். திருவல்லிக்கேணி கடற்கரையில், கொட்டும் மழையில், பெருங்கூட்டத்தினிடையே 3.8.62 அன்று பேசியபோது, “ஓட்டு முறையில்தான் நம்பிக்கை; வேட்டு முறையில் அல்ல, என்று கூறிய கண்ணீர்த்துளிக் கட்சியினர் இப்படி அராஜகச் செயல்களில் ஈடுபடலாமா? காவல் துறையினரும் பல நேரங்களில் தாட்சண்யமாக நடந்து விடுகின்றனரே; தலைமைக் காவல் அதிகாரிகளாக ஏன் வெள்ளைக்காரர்களையே நியமிக்கக் கூடாது?" என்று வினவினார் பெரியார். பட எரிப்புப் போரில் மன்னிப்புக் கேட்கச் சொன்னபோது மறுத்து, இரண்டாண்டு சிறைத் தண்டனை ஏற்று, மேஜர் ஆகாததால், நெல்லை தட்டாம்பாறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து, விடுதலை பெற்ற வீரன் நாகராசனுக்குத் திருச்சியில் மாபெரும் வரவேற்பு வைபவம் நடைபெற்றது. பெரியார், “இந்தச் சிறுவனுக்கு முன்பு, மன்னிப்புக் கேட்கும் கண்ணீர்த் துளிகள் எம்மாத்திரம்?” என்று பாராட்டினார்