பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

340



“வரவேற்கிறேன்” என்று “விடுதலை”யில் 10.8.62 அன்று பெரியார் ஒரு தலையங்கம் தீட்டினார். ஆமாம்! யாரை வரவேற்கின்றார். படித்தால் புரியும்: "என் உடல் நிலை எனக்குத் திருப்தி அளிக்கத் தக்கதாய் இல்லை. இப்போதுபோல் சுற்றுப் பிரயாணம் செய்ய என்னால் இனி முடியாது. கழகம் நல்லபடி இயங்க வேண்டுமானால் பிரச்சாரமும் பத்திரிகையும் மிக அவசியமாகும். நான் ஒருவன்தான் இவை இரண்டிற்கும் முழுநேரத் தொண்டனாகவும், கழகத்தில் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் இல்லாதவனாகவும் இருந்து வந்தேன். இன்றும் அந்தப்படியே இருந்து வருகிறேன். இன்று கழகத்தின் மூலம் ஊதியம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லாத தோழர்கள் கழகத்தில் ஏராளமான பேர் இருந்து, நல்ல தொண்டு ஆற்றி வருகிறார்கள். ஆனால் பிரச்சாரத்திற்கும் பத்திரிகைக்கும் தங்களை முழுநேரம் ஒப்படைக்கக் கூடிய தோழர்கள் கிடைக்கவில்லை.

தோழர் வீரமணியைக் கேட்டுக் கொண்ட போது, சென்னையில் வக்கீல் தொழில் நடத்திக்கொண்டு, கழக வேலைகளையும் பத்திரிகையையும் பார்த்துக் கொள்ளுவதாகச் சொன்னார். அது எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. கிடைத்த அனுகூலத்தை விடக்கூடாதென்று துணைப் பொதுக் காரியதரிசியாகத் தேர்ந்தெடுக்கச் செய்தேன். இன்னொரு துணைப் பொதுக் காரியதரிசியாகிய ஆனைமலைத் தோழர் நரசிம்மன், தவிர்க்க முடியாத சொந்த அலுவல்களால் ஊருக்குப் போய்விட்டார்,

பிறகு வீரமணி, நான் உள்படப் பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்கக் குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார். கழத்தின் முழு நேரத் தொண்டராயிருந்து பிரச்சாரத் தொண்டையும் பத்திரிகைத் தொண்டையும் ஏற்கத் துணிந்தார்.

இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத பெரும் நல்வாய்ப்பு என்றே கருதித் திரு வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்! வீரமணிக்குக் கடலூரிலேயே வக்கீல் தொழிலில் மாதம் 200, 300 வருமானம் வந்தது; அவர் வேறு உத்தியோகத்துக்குப் போனாலும் மாதம் 250ரூ. கிடைக்கும். அதையெல்லாம் விட்டுக் கொடுத்துதான் இங்கு வந்திருக்கிறார்.

உண்மையைச் சொல்கிறேன்; தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், “விடுதலை” தினசரிப் பத்திரிகையை நிறுத்திவிட்டு, ஈரோடு அல்லது திருச்சியில் வாரப் பத்திரிகை நடத்த முடிவு செய்தேன். மணியம்மையாரின் தொண்டும் பாராட்டத்தக்க விதத்தில் கழகத்துக்குக் கிடைத்து வருகிறது. தோழர் இமய வரம்பன் புலவர் பட்டம் பெற்றவர். அவரும் உத்தியோகத்துக்குப் போகாமல் கழகத்தின் முழுநேரத் தொண்டு ஆற்றிவருவதும் பாராட்டத்தக்கதாகும்.