பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



ஆகையால், இதுபோல இன்னும் முழுநேரத் தொண்டர்கள் கிடைத்தால் வரவேற்கத் தயாராய் இருக்கிறேன். ஆண்கள் வந்தாலும் சரி. பெண்கள் வந்தாலும் சரி; உடை, உணவு பெறலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு, அப்படி வருபவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

20.8.62 அன்று சென்னைத் தோழர் கே. கோவிந்தசாமி மணிவிழாவினைத் தமிழ் தேசியக் கட்சி நடத்தியபோது, பெரியாரும் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தித் “தவறுகாண முடியாத நாணயமான உழைப்பாளி" என்று பாராட்டினார். அண்ணாவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், சம்பத்துடன் தமிழ் தேசியக் கட்சிக்கும் சென்றாலும், நல்லவர் என்று பெயர் பெற்றவர் கோவிந்தசாமி.

கழகப் பணிக்குத். தமக்கு மேலும் சில முழு நேரத் தொண்டர்கள் தேவை எனப் பெரியார் கருத்துத் தெரிவித்தார். 23.8.62 அன்று திருச்சி பெரியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில், பெரியாருடன் சம்பத்தும் கலந்து கொண்டார். புதுவையில் சாதி ஒழிப்பு மாநாடு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் - மேயர் - குபேர் திறந்து வைத்தார். பெரியாருடன் சம்பத், கண்ணதாசன், தமிழ்வாணன், மீனாம்பாள் சிவராஜ். தி.பொ. வேதாசலம் பங்கேற்றனர். திராவிடர் கழகப் பணிகளில் இறுதிவரை பெருந்தொண்டு புரிந்து வந்த திருமதி இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார் 2.8.1962 அன்று மறைந்த போது பெரியார் வருகை தந்து, அள்ளாரின் சேவைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

“ஈ.வெ. ரா. வும் நானும் எப்போதும் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள். என் பிறந்த நாளில் அவரும் அவர் பிறந்த நாளில் நானும் வாழ்த்துகள் பரிமாறிக்கொண்டுதான் வருவோம். நட்பும் இருந்து கொண்டேயிருக்கும். சண்டையும் இருந்து கொண்டேயிருக்கும். இதைப் பற்றி யாரும் கவலையோ குழப்பமோ கொள்ளலாகாது”, என்று 14.9.62 அன்று சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியார் பெரியார் பிறந்த நாள் செய்தி அனுப்பியிருந்தார். “விடுதலை”சிறப்பு மலரில் காமராசர், ம.பொ.சி. அடிகளார், சம்பத், கண்ணதாசன், எம்.ஆர்.ராதா லட்சுமிரதன் பாரதி ஆகியோர் கட்டுரை வழங்கியிருந்தனர். 17.9.62 முதல் “விடுதலை” தலையங்கத்திற்கு மேற்புறம் பெரியார் பொன்மொழிகள் தினம் ஒன்று வீதம் வெளியிடப்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள பள்ளிகளின் நிறுவனர் நாள் 17.9.62ல் கொண்டாடப்பட்ட போது, பெரியார் அங்கே கலந்து கொண்டார், பெரியாரின் 84வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும், தமிழர் வாழும் பிறநாடுகளிலும் குதூகலமாகக் கொண்டாடப் பெற்றது.